சேத்துப்பட்டு பேரூராட்சியில் அடிப்படை வசதியின்றி பரிதவிக்கும் இருளர் காலனி மக்கள்

சேத்துப்பட்டு பேரூராட்சியில் அடிப்படை வசதியின்றி பரிதவிக்கும் இருளர் காலனி மக்கள்

*மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

சேத்துப்பட்டு :  சேத்துப்பட்டு பேரூராட்சியில் உள்ள கண்ணனூர் இருளர் காலனி அம்பேத்கர் நகர் மக்கள் அடிப்படை வசதி எதுவும் இன்றி பரிதவித்து வருகின்றனர். சேத்துப்பட்டு பேரூராட்சியில் கண்ணனூர் பகுதியில் உள்ளது இருளர் காலனி (அம்பேத்கர் நகர்) பகுதி. இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்கள். மரம் வெட்டுதல், பாம்பு பிடித்தல் என கூலி வேலை செய்து ஊர் ஊராக சென்று பிழைப்பு நடத்துகின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு அரசு பட்டா வழங்கி உள்ளது.

இதில் குடிசை கட்டி வாழ்ந்து வந்தனர். கடந்த 2015ம் ஆண்டு 15 வீடுகள் குடிசை வீடுகள் எரிந்தது. இதனால் அரசு உதவித்தொகை வழங்கியது. ஆனால் இதுவரை இவர்களுக்கு வீடு கட்டி தரவில்லை. நாடோடி பிழைப்பில் இருந்து இவர்கள் மீள ஆடு, மாடு என எந்த உதவியையும் செய்து தரவில்லை. வெயிலில் காய்வதும் மழையில் நனைவதும் வாடிக்கையாக உள்ளது. அரசு எங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், சாலை வசதி, வீடு என எதுவும் வழங்கவில்லை. சிலருக்கு தொண்டு நிறுவனம் கட்டி கொடுத்த வீடும் சேதமடைந்துள்ளது.

நாங்களும் பலமுறை மாவட்ட கலக்டரை சந்தித்து தொடர்ந்து மனு கொடுத்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. மழைக்காலத்தில், வெள்ள அபாய காலங்களில் எங்களை அதிகாரிகள் பள்ளிகளில் தங்க வைத்து சோறு போடுகின்றனர். இதுதவிர எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை. எங்கள் பகுதியில் வாழ்க்கை நடத்த வழியில்லாமல்  வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம் என்கின்றனர் இப்பகுதி மக்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிப்படை வாழ்க்கைக்கு பரிதவிப்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றனர் இப்பகுதி மக்கள்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy