டிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்  – தேர்தல் ஆணையர் அறிவிப்பு

டிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் – தேர்தல் ஆணையர் அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிறபகுதிகளில் டிச 27, 30 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று மாலை அறிவித்துள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து அதற்கான பணிகளை தொடங்கியது. இந்த அறிவிப்பை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தொகுதி வரையறையை முடிக்காமல் தேர்தலை நடத்தக்கூடாது என திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

அப்போது, தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் 4 மாதத்தில் தொகுதி மறுவரையறை பணிகளை முடித்து தேர்தலை நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, ஆணைய செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் ஊரக உள்ளாட்சி வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றனர். தேர்தல் தேதி அட்டவணையை இறுதி செய்வது குறித்து இந்த ஆலோசனை நடைபெற்றது.

இந்நிலையில் இன்று மாலை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிறபகுதிகளில் டிச 27, 30 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.

உள்ளாட்சி தேர்தலுக்கு 9.12.2019 அன்று முதல் 16.12.2019 வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும்
17.12.2019 அன்று வேட்பு மனு மீது ஆய்வு நடைபெறும். வேட்புமனுக்களை திரும்ப பெற 19.12.2019 அன்று கடைசி நாளாகும்.

இருகட்டங்களாக நடைபெறும் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் 2.1.2020 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்  என்று தெரிவித்துள்ளார். 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan