அரூர் அருகே காரப்பாடியில் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மலை கிராம மக்கள்

அரூர் அருகே காரப்பாடியில் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மலை கிராம மக்கள்

*சாலை அமைத்து தர வலியுறுத்தல்

அரூர் : அரூர் அருகே காரப்பாடி மலை கிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்றி சிரமப்படும் மக்கள், சாலை வசதிகளை மேம்படுத்தி, பள்ளிகளை தரம் உயர்த்தவேண்டும்  என கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா, சிட்லிங் பஞ்சாயத்துக்குட்பட்ட காரப்பாடி மலை கிராமம், பூமியின் தரைமட்டத்திலிருந்து, 3000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் அடிவாரமான கெளாப்பறை கிராமத்தில் இருந்து, சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்த இந்த கிராமத்தில், இன்று வரை மின்சாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால், சொந்த விவசாய நிலம், வீடுகளைவிட்டு சிலர் மலை அடிவாரமான வேப்பம்பட்டி கிராமத்தில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். தற்போது தமிழக அரசு கிராமத்திற்கு மின்சாரம் வழங்கும் பணிகள் நடந்து வருவதால், கிராமத்தை விட்டு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், முறையான சாலை வசதி இல்லாத காரணத்தால், கட்டுமான பொருட்கள் எதையும், மலையின் மீது ஏற்றிச் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அனைத்து வீடுகளும் மண் சுவரால் கட்டப்பட்டு, கூரை, ஓட்டு வீடுகள் மட்டுமே உள்ளது.

அதே போல் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மட்டுமே உள்ள பள்ளிகள் சிமெண்ட் அட்டைகளில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இதுவரை சோலார் மின்சாரம் மூலம், தெருவிளக்குகள் குறைந்த வெளிச்சத்தில் மட்டுமே இருந்து வருகிறது. அதுவும் அடிக்கடி பழுது அடைந்து விடுகிறது. மண்ணெண்ணை விளக்கு, தீப்பந்தங்களை பயன்படுத்தி எந்த விசேஷமாக இருந்தாலும் பயன்படுத்தி வருகின்றனர். காரப்பாடியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை மட்டுமே உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள், மேல்படிப்பு  படிக்க அரூர், கீரைப்பட்டி போன்ற பகுதிக்கு நடந்தே செல்ல ேவண்டிய நிலை உள்ளது.

இதனால் விடுதி வசதி உள்ள பள்ளிகளில்  மாணவர்கள் சேர ேவண்டியுள்ளது. 11 வயதே ஆகும் மாணவ, மாணவிகள், தங்கள் தேவையை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத வயதில் இருப்பதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியில் தங்கி படிக்க அனுப்புவதில்லை. இது குறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், ‘காரப்பாடி மலை கிராமத்தில் இருந்து  கெளாப்பாறை வரை, சாலை அமைத்து பஸ் இயக்க வேண்டும். அப்போதுதான் எங்கள் கிராமத்தில், கான்கிரீட் வீடுகள் கட்ட முடியும்.

அரசு வழங்கும் பசுமை வீடுகள் இன்று வரை எங்கள் கிராமத்தில் கட்ட முடியவில்லை. முதியோர் ஓய்வு ஊதியம் வாங்கும் 15க்கும் மேற்பட்ட வயதானவர்கள், 9கிலோ மீட்டர் நடந்து சென்று, கீரைப்பட்டியில் உள்ள வங்கியில் பெற்று வருகின்றனர். ஞாயவிலைக்கடைக்கு மலையடி அடிவாரத்திலுள்ள 8 கிலோ மீட்டர் தொலைவில் எருக்கம்பட்டிக்கு சென்று பொருட்களை வாங்கி, தலை சுமையாக எடுத்து மலையேறி வீடு திரும்ப வேண்டி உள்ளது. அரசு தொடக்க பள்ளியை, நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தி, மலைகிராம மாணவ, மாணவிகள் மேல்படிப்பு படிக்கவும், கூரை வீடுகள் இல்லாத கிராமமாக மாறுவதற்கும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy