அய்யம்பாளையம் மருதாநதி அணையிலிருந்து நெல் நடவுக்காக 90 கன அடி தண்ணீர் திறப்பு

அய்யம்பாளையம் மருதாநதி அணையிலிருந்து நெல் நடவுக்காக 90 கன அடி தண்ணீர் திறப்பு

பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையம் மருதாநதி அணையின் மொத்த உயரம் 72 அடியாகும். தற்போது அணையில் 69 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு சுமார் 80 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. கடந்த மாதம் 9ம் தேதி முதல் போக நெல் சாகுபடிக்காக திறக்கப்பட்ட தண்ணீர் சென்ற மாத இறுதியில் நிறுத்தப்பட்டது. தற்போது எம்.வாடிப்பட்டி, கோம்பைப்பபட்டி ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 500 ஏக்கர் நிலங்களில் நாற்று நடவு பணிக்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாற்று நடவிற்காக நேற்று 90 கன அடி தண்ணீர் மருதாநதி அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ளது.

அணையிலிருந்து தண்ணீரை பொதுபணித்துறையினர் திறந்துவிட்டனர். அணையிலிருந்து 2 அடி உயர தண்ணீரை இப்பகுதி விவசாயிகளுக்கு நாற்று நடும் பணிக்காக வழங்க உள்ளதாக பொதுபணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 60 அடியில் இருந்த இந்த அணையின் நீர்மட்டம் தாண்டிக்குடி மலைப்பகுதி, பண்ணைக்காடு, பாச்சலூர், கடுகுதடி போன்ற மலைப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி போன்ற நீர்பிடிப்பு பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக 9 அடி உயர்ந்து 69 அடியாக உள்ளது. மேலும் இந்த அணை தண்ணீர் மூலமாக நிலக்கோட்டை, ஆத்தூர் ஆகிய இரண்டு தாலுகாகளைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy