கொசுக்கடிக்கு புகை மூட்டம் போட்டதால் பாிதாபம் வீடு, ஆட்டுக்கொட்டகை தீயில் கருகி நாசம்

கொசுக்கடிக்கு புகை மூட்டம் போட்டதால் பாிதாபம் வீடு, ஆட்டுக்கொட்டகை தீயில் கருகி நாசம்

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அருகே கொசுக்கடிக்கு புகைமூட்டம் போட்டதால் வீடு, ஆட்டுக்கொட்டகையில் தீப்பிடித்தது.இதில் 6 ஆடுகள் கருகி பலியானது. முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு வடக்கிக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்லையன் மகன் வடிவேல்(68). விவசாய கூலித்தொழிலாளி. நேற்றிரவு இவரும் இவரது மனைவியும் வீட்டில் இருந்தனர். வீட்டை ஒட்டி கொட்டகை போட்டு 6ஆடுகள் வளர்த்து வந்தனர். இதில் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை கொசுக்கள் கடிக்காமல் இருக்க கொட்டகையில் வடிவேல் தினமும் புகை மூட்டம் போடுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் புகை மூட்டம் போட்டு விட்டு இருவரும் தூங்கி விட்டனர். நள்ளிரவு 12மணியளவில் ஆடுகளின் அலறல் சத்தத்தை கேட்டு கணவன், மனைவி இருவரும் எழுந்து வந்து பார்த்த போது புகை மூட்டத்திலிருந்து தீப்பிடித்து கொட்டகை எரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். உடன் அக்கம்பக்கத்தினர் வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனாலும் ஆட்டுக்கொட்டகையில் பிடித்த தீ வீட்டின் கூரையிலும் பட்டு எரியதுவங்கியது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இருந்தும் வீடு முழுவதும் தீயில் எரிந்து சாம்பலாகியது. இதில் 6ஆடுகளும் தீயில் கருகி உயிரிழந்தது. மேலும் வீட்டில் இருந்த பாத்திரங்கள், பீரோ, கட்டில் என அனைத்து பொருட்களும் தீயில் கருகி நாசமானது. வீட்டின் சேதமதிப்பு ரூ.1லட்சம் என்றும், இறந்த ஆடுகளின் மதிப்பு 20ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆர்ஐ கஜேந்திரன், விஏஓ வேலாயுதம் ஆகியோரும் பார்வையிட்டு சேதமதிப்புகளை கணக்கீட்டு விசாரணை நடத்தி அரசின் உதவிக்கு பரிந்துரை செய்தனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy