பள்ளத்தாக்கில் தள்ளப்படும் பொருளாதாரம் : சென்னையில்  …6 நிமிட வாசிப்புபாஜக இந்தியாவை வளர்ச்சிப் பாதையை நோக்கி கொண்டுசெல்லவில்லை என்று ப.சிதம்பரம் வி…

பள்ளத்தாக்கில் தள்ளப்படும் பொருளாதாரம் : சென்னையில் …6 நிமிட வாசிப்புபாஜக இந்தியாவை வளர்ச்சிப் பாதையை நோக்கி கொண்டுசெல்லவில்லை என்று ப.சிதம்பரம் வி…

பாஜக இந்தியாவை வளர்ச்சிப் பாதையை நோக்கி கொண்டுசெல்லவில்லை என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் ஊடகம் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை கைது செய்த நிலையில், சுமார் 106 நாட்கள் திகார் சிறைவாசத்திற்குப் பிறகு கடந்த 4ஆம் தேதி ஜாமீனில் விடுதலையானார் சிதம்பரம். அடுத்த சிறிது நேரத்திலேயே காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தவர், மறுநாள் நாடாளுமன்றம் சென்று வெங்காய விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்திலும் கலந்துகொண்டார். அதன்பின்னர், ஜார்க்கண்டில் பிரச்சாரம் என தனது வழக்கமான அரசியல் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார்.

இந்த நிலையில் சிறை வாசத்திற்குப் பிறகு முதல் முறையாக இன்று (டிசம்பர் 7) தமிழகம் வருகை தந்தார் ப.சிதம்பரம். பல மாவட்டங்களிலிருந்து திரண்டு வந்திருந்த காங்கிரஸ் தொண்டர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சிதம்பரத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், “உங்களின் அன்பான வரவேற்புக்கு நன்றி. சுதந்திரக் காற்றை சுவாசித்து வெளியே வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. அதே சமயம், நாட்டின் பல பகுதிகளில் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. சுதந்திரக் குரல்கள் நெறிக்கப்படுகின்றன. உங்களிடம் நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 75 லட்சம் மக்களுக்கு சுதந்திரம் மறுக்கப்பட்டிருக்கிறது. ஒருவருடைய சுதந்திரம் மறுக்கப்பட்டால் அது அனைவருடைய சுதந்திரமும் மறுக்கப்பட்டதாகத்தான் அர்த்தம்” என்று குறிப்பிட்டவர்,

“வலதுசாரி, பிற்போக்கு, மக்களின் சுதந்திரத்தை பறிக்கக் கூடிய ஒரு பாசிச அரசு முறையை நோக்கி நாடு நகர்ந்துகொண்டிருக்கிறது. அனைவரும் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் காட்டும் எச்சரிக்கையை என்று இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் காட்டுகிறார்களோ அப்போதுதான் இது உண்மையான சுதந்திர நாடாக இருக்கும். நான் தமிழக மக்களைப் பாராட்டுகிறேன். பாஜகவை கடுமையாக எதிர்த்தது தமிழ்நாட்டு மக்கள்தான். தமிழ் மக்களின் உணர்வுகள் நாடு முழுவதும் பரவ வேண்டும் என்பது எனது ஆசை” என்று பாஜகவை விமர்சித்தும் தமிழக மக்களைப் பாராட்டியும் பேசினார்.

image

வழக்கைப் பற்றி நான் பேசப்போவது கிடையாது என்று தெளிவுபடுத்திய சிதம்பரம், “என்னுடைய மன உறுதியைக் குலைக்க வேண்டும் என்று நினைத்துதான் என்னுடைய சிறையில் அடைத்தார்கள். என்னுடைய மன உறுதி ஒருநாளும் குலையாது. நான் ஒருபோதும் வீழமாட்டேன். காரணம், காங்கிரஸ் கட்சியும், இந்திய மக்களின் சுதந்திர தாகமும் எனக்குப் பின்னால் இருக்கிறது. என்னுடைய உடல்நலத்தை குலைக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதில், ஒரு 10 நாட்கள் வெற்றியும் பெற்றார்கள். நீதிமன்றம் தலையிட்ட பிறகு மருத்துவர்கள் சிகிச்சைக்குப் பிறகு எனது உடல்நலம் முழுக்க முழுக்க தேறியிருக்கிறது” என்று சிறை நாட்கள் குறித்து விவரித்தார்.

இந்தியாவின் மோசமான பொருளாதார நிலையை என்னால் இயன்ற அளவு எடுத்துச் சொன்னேன். அதனை தொடர்ந்து சொல்லுவேன். இந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது. வரும் நாட்களின் நீங்கள் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். தொடர்ந்து நாள்தோறும் உங்கள் மத்தியில் பேசுவேன், எழுதுவேன் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்த சிதம்பரத்திடம், சிறையிலிருந்து வெளியே வந்த முதல் நாளே நீதிமன்ற உத்தரவை நீங்கள் மீறிவிட்டீர்கள் என பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டியுள்ளாரே என்ற கேள்விக்கு, “பிரகாஷ் ஜவடேகருக்கு நீதிமன்றத் தீர்ப்பு என்னவென்றும் தெரியாது. நான் என்ன பேசினேன் என்பதும் தெரியாது” என்று பதிலளித்தார்.

வளர்ச்சி விகிதம் தொடர்பாக பேசிய சிதம்பரம், “2004 முதல் 2010 வரை இந்தியாவில் 8.5 சதவிகிதம் வளர்ச்சி இருந்தது. இதில் இடையே 4 ஆண்டுகள் 9 சதவிகித வளர்ச்சி. பாஜக சொல்லும் வளர்ச்சி 8இல் தொடங்கி 4.5 இல் முடிந்திருக்கிறது. ஆனால், அரவிந்த் சுப்பிரமணியன் சொன்னது போல 3 சதவிகிதத்திற்குதான் ஈடாகும். இந்தியாவை வளர்ச்சியை நோக்கி பாஜக அழைத்துச் செல்லவில்லை. பள்ளத்தாக்கில் தள்ளுகிறார்கள். பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீளமுடியுமா என்று எனக்குத் தெரியவில்லை” என்று தெரிவித்துவிட்டுச் சென்றார்.

நாளை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் ப.சிதம்பரம், அங்கிருந்து புதுக்கோட்டை வழியாக சொந்த ஊரான சிவகங்கைக்கு செல்கிறார். வழிநெடுக சிதம்பரத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்க காத்திருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்

Source: Minambalam.com

Author Image
murugan