வெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் – மத்திய அரசு தகவல்

வெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் – மத்திய அரசு தகவல்

வெங்காய உற்பத்தி குறைந்தது தான் விலை உயர்வுக்கு காரணம் என மத்திய அரசு கூறியுள்ளது.

புதுடெல்லி:

நாடு முழுவதும் வெங்காய விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன.

அதேநேரம் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. எகிப்து போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் வெங்காயம், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் சந்தைகளுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் வெங்காய விலை உயர்வு தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் நேற்று பேசிய உறுப்பினர்கள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து கவலை வெளியிட்டனர். இதற்கு மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநிலங்கள் அளித்த தகவல்களின்படி கடந்த 30-ந் தேதிக்குள் 69.90 லட்சம் டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் என மதிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் 53.67 லட்சம் டன் வெங்காயம் மட்டுமே உற்பத்தியாகி இருக்கிறது. இதன் மூலம் வெங்காய உற்பத்தியில் சுமார் 16 லட்சம் டன் வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.

இது நிச்சயம் ஒரு பற்றாக்குறைதான். தற்போதைய விலை உயர்வு பிரச்சினைக்கு இதுவே காரணம். ஆனால் இது இயற்கைதான். எனினும் இந்த பிரச்சினையை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக ஏற்றுமதிக்கு தடை, இறக்குமதிக்கு அனுமதி என பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

மேலும் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துள்ள மத்திய அரசு, இது தொடர்பாக மாநில முதல்-மந்திரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இவ்வாறு நரேந்திர சிங் தோமர் கூறினார். 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan