கார் மீது பஸ் மோதியது ஒரே குடும்பத்தில் 5 பேர் பரிதாப பலி

கார் மீது பஸ் மோதியது ஒரே குடும்பத்தில் 5 பேர் பரிதாப பலி

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் முத்தமிழ்செல்வன் (35). இவர் சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மேற்படிப் பிற்காக லண்டன் சென்று விட்டு சென்னைக்கு வந்தார். இவரை அழைத்து செல்ல மனைவி நிஷா(32), மகன் சித்தார்த் (7), மகள் வைஷ்ணவி(1), திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மாமியார் மல்லிகா (70) ஆகியோர் திருச்சியில் இருந்து நேற்று சென்னைக்கு ரயிலில் சென்றனர். பின்னர் சென்னையில் இருந்து திருச்சிக்கு காரில் திரும்பினர். காரை முத்தமிழ்செல்வன் ஓட்டி வந்தார்.நேற்று மதியம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த வண்டிப் பாளையம் மழை மாரியம்மன் கோயில் எதிரில் வந்தபோது திடீரென நிலைதடுமாறிய கார் சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதி மற்றொரு சாலையில் சென்று நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அப்போது அந்த வழியாக உளுந்தூர்பேட்டையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற தனியார் பேருந்து கண் இமைக்கும் நேரத்தில் கார் மீது மோதியது. இதில் கார் பேருந்தின் அடிப்பகுதியில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது. சிறிது தூரம் இழுத்து சென்ற காரில் இருந்த முத்தமிழ்செல்வன் உள்பட 5 பேரும் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடினர். உடன் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருநாவலூர் போலீசார் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காரில் உயிருக்கு போராடியவர்களை மீட்பதற்காக தனியார் பேருந்தை சாலையின் ஓரம் இருந்த பள்ளத்தில் தள்ளிவிட்டனர்.அப்போது பேருந்தும், காரும் தனித்தனியாக பிரிக்கப்பட்டது. இதற்குள் காரில் சிக்கிய முத்தமிழ்செல்வன், நிஷா, மல்லிகா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த குழந்தைகள் சித்தார்த் மற்றும் வைஷ்ணவி ஆகியோர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சித்தார்த் இறந்தான். இதன் பின்னர் சிகிச்சை பலனின்றி குழந்தை வைஷ்ணவியும் இறந்தது.

இந்த விபத்தில் தனியார் பஸ்சில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்டோர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தினால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிநேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடன் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜயக்குமார், திருநாவலூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விஜி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரதி, சடையப்பிள்ளை மற்றும் போலீசார், உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையிலான குழுவினர் விபத்துக்குள்ளான வாகனங்களை கிரேன் மூலம் மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.விபத்தில் உயிரிழந்த 5 பேரின் சடலங்களும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy