சமத்துவ பொங்கல் விழா வயலில் இறங்கி ஏர் உழுத சார்-ஆட்சியர், டிஎஸ்பி

சமத்துவ பொங்கல் விழா வயலில் இறங்கி ஏர் உழுத சார்-ஆட்சியர், டிஎஸ்பி

வைகுண்டம்: வைகுண்டத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் வயலில் உழவு பணியில் சார்-ஆட்சியர் மற்றும் டிஎஸ்பி, அதிகாரிகள் ஈடுபட்டனர். வைகுண்டத்தில் மும்மதத்தினரும் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா காவல்துறை சார்பில் நடந்தது. விழாவிற்கு ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சுரேஷ்குமார், சார்-ஆட்சியர் சிம்ரான் ஜித்சிங் ஹாலேன் ஆகியோர் தலைமை வகித்தனர். வைகுண்டம் தாசில்தார் சந்திரன், ஏரல் தாசில்தார் அற்புதமணி, குருசுகோயில் பங்குத்தந்தை மரியவளன், பள்ளிவாசல் ஜமாத்தலைவர் ஷாஜகான், பெருங்குளம் செங்கோல் ஆதீனம், தொழிலதிபர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் காவல் துறையினரும் பொதுமக்களும் இணைந்து பொங்கலிட்டனர். தொடர்ந்து, சார்-ஆட்சியர் சிம்ரான்ஜித்சிங் ஹாலேன், டிஎஸ்பி சுரேஷ்குமார் ஆகியோர் அருகில் உள்ள வயலில் மாடுகளை கொண்டு உழுது நெல் நாற்றுகளை நட்டனர். இதை தொடர்ந்து விவசாயிகள் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் நாட்டுபுறப்பாட்டு, கணியான்கூத்து, கரகாட்டம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.தொடர்ந்து, காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவை மேம்படுத்தும் விதமாக கோலப்போட்டி, வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.காவல்துறையினர் தங்களது பணி சுமையினை மறந்து குடும்பத்தினருடன் இணைந்து பொது மக்களோடு விளையாடி மகிழ்ந்தனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy