ரோபோ மூலம் கழிவுகளை அகற்ற வலியுறுத்தி உயர்நீதிநீதி மன்றத்தில் வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவிப்பு

ரோபோ மூலம் கழிவுகளை அகற்ற வலியுறுத்தி உயர்நீதிநீதி மன்றத்தில் வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவிப்பு

மதுரை: மதுரை, யாகப்பா நகரைச் சேர்ந்த இருளாண்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
மனிதக் கழிவை மனிதனே அகற்றுவதை தடுத்து சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால், கழிவை அகற்றும் பணியின் போது ஏற்படும் மனித மரணங்கள் தொடர்கிறது. இதில் அரசின் உத்தரவை அரசே மதிக்காத நிலை உள்ளது. இழப்பீடு வழங்கும் உத்தரவும் முறையாக பின்பற்றப்படவில்லை. தூய்மை இந்தியா திட்டத்திற்காக 2018-19ல் மட்டும் ரூ.15 ஆயிரம் கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், மனிதக் கழிவை மனிதனே அகற்றுவதை தடுக்க ரோபோ போன்ற இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். பயோ செப்டிக் டேங்க் போன்றவற்றை அரசே ஊக்குவிக்க வேண்டும். தமிழக உள்ளாட்சிகளில் 35 ஆயிரம் பேர் துப்புரவு பணியில் உள்ளனர்.

அவர்கள் நலன் கருதி கேரளாவைப் போல கழிவு அகற்றும் பணியில் ரோபோவை ஈடுபடுத்தவும், பயோ செப்டிக் டேங்க் பயன்பாட்டை அதிகரிக்கவும், சட்டம் முறையாக பின்பற்றப் படுகிறதா என்பது குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் மத்திய சமூக நீதித்துறை செயலர், ரயில்வே வாரிய தலைவர், தமிழக தலைமை செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை செயலர்கள் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy