வாலாஜா, காட்பாடியில் கடும் பனிமூட்டத்தால் பயங்கரம் 10 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 12 பேர் படுகாயம்

வாலாஜா, காட்பாடியில் கடும் பனிமூட்டத்தால் பயங்கரம் 10 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 12 பேர் படுகாயம்

வாலாஜா: வாலாஜாவில் கடும் பனி மூட்டத்தில் சிக்கி நேற்று காலை 9 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. அதேபோல காட்பாடியில் சென்டர் மீடியனில் மோதி லாரி நொறுங்கியது. இந்த விபத்தில் திமுக பிரமுகர் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று காலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. காலை 8 மணி வரை பனிப்பொழிவு இருந்தது. இந்நிலையில், பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வேலூரில் இருந்து 3 மினிலாரிகள், கார்கள் நேற்று காலை சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தன.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் மேம்பாலத்தில் முன்னால் சென்ற கார் மீது எதிர்பாராதவிதமாக மினி லாரி மோதியது. இதில் காரின் பின்புறம் நொறுங்கியது. அதற்குள் பின்னால் வந்த மற்ற 2 மினிலாரிகளும் அடுத்தடுத்து மோதின. அப்போது பின்னால் வந்த மேலும் 5 கார்கள், மினி லாரி, கார்கள் மீது ஒன்றோடு ஒன்று மோதி நொறுங்கின. இதில் ஒரு கார், கன்டெய்னரின் அடியில் சிக்கிக்கொண்டது. தாறுமாறாக வாகனங்கள் சிக்கியதால் அதில் இருந்தவர்கள் வெளியே வரமுடியாமல் கூச்சலிட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்த வாலாஜா போலீசார், ராணிப்பேட்டை தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றிய திமுக செயலாளர் குமரபாண்டியன் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவ்வழியாக சென்ற அமைச்சர் நீலோபர் கபீல், விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டு மீட்பு பணிகளை விரைந்து முடிக்கும்படி உத்தரவிட்டார். இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், வேலூர் மாவட்டம், காட்பாடியில் இருந்து திருவலம் வழியாக சரக்கு லாரி நேற்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, பழைய காட்பாடி அருகே செல்லும் வழி மிகுந்த பனிமூட்டத்துடன் காணப்பட்டது. இதில் சாலையின் நடுவே ஆங்காங்கே இடைவெளிவிட்டு சென்டர் மீடியன் அமைக்கப்பட்டிருந்ததால் திடீரென லாரி, சென்டர் மீடியன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி டிரைவர் உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர். அப்பகுதி மக்கள், 2 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy