குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

புதுடெல்லி:

குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, கடந்த 10-ந்தேதி மத்திய அரசிதழிலும் வெளியிடப்பட்டது. மதச்சார்பின்மைக்கு எதிரான இந்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் அமைப்புகளும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றன. டெல்லி, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறியது.

இந்த சட்டத்துக்கு எதிராக ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ராஷ்டிரீய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்நிலையில் முதன்முறையாக ஒரு மாநில அரசு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. கேரள மாநில அரசு தாக்கல் செய்த அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்டம் அரசியல் நிர்ணய சட்டப்பிரிவுகள் 14 (சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்), 21 (வாழ்வதற்கான உரிமை, தனிநபர் சுதந்திரம்) மற்றும் 25 (சுதந்திரமாக தொழில் செய்தல், விரும்பிய மதத்தின் நடைமுறைகளை பின்பற்றுதல்) ஆகியவற்றுக்கு எதிரானது.

அரசியல்சாசனத்தின் அடிப்படையான சம உரிமை, சுதந்திரம், மதசார்பின்மை ஆகியவற்றுக்கு எதிரானது. எனவே இந்த சட்ட திருத்தத்தை ரத்துசெய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கேரள அரசின் இந்த மனுவுடன் சேர்த்து ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 59 மனுக்களும் வருகிற 22-ந்தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கேரள மாநில அரசு முதல் முறையாக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan