அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது…. சீறி வரும் காளைகள்… கெத்து காட்டும் காளையர்….

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது…. சீறி வரும் காளைகள்… கெத்து காட்டும் காளையர்….

மதுரை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் பாரம்பரியமான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை அவனியாபுரத்தில் இன்றும், பாலமேட்டில் நாளையும், அலங்காநல்லூரில் நாளை மறுதினமும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டிகள்  மாலை வரை நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் வினய் தலைமையில் வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர். ஐகோர்ட்டு உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம், மாநகர காவல் ஆணையர் டேவிட்சர் தேவ ஆசிர்வாதம், மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோரைக் கொண்ட ஜல்லிக்கட்டு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அவனியாபுரம்-திருமங்கலம் சாலையில் வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் நின்று ரசிக்க பேரிகார்டுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய ஜல்லிக்கட்டுப்போட்டியில் பங்கேற்க 700 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காளைகளை அடக்க 730 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர். முதலில் நாட்டாமைக்கு சொந்தமான காளை வாடிவாசலில் அவிழ்த்து விடப்படும். அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்படும். அதனை பிடிக்க 700 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவர்கள், குழுவாக களம் இறக்கப்படுவார்கள்.

ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை இந்த குழு மாற்றப்பட்டு, மற்றொரு குழு இறக்கப்படும். சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் பித்தளை அண்டாக்கள், சைக்கிள், குத்துவிளக்கு, வேஷ்டி-துண்டு போன்றவை பரிசாக வழங்கப்பட உள்ளன. ஜல்லிக்கட்டை பலரும் கண்டு களிக்க வசதியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே எல்.இ.டி. டி.வி.க்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy