மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையில் குடிமகன்கள் அட்டகாசம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையில் குடிமகன்கள் அட்டகாசம்

தேனி: தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து வரும் குடிமகன்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து கிழக்கே உள்ள திட்டச்சாலை வழியாக கலெக்டர் அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட கல்வித்துறை அலுவலகம், வேளாண்மைத்துறை அலுவலகம், வட்டாரபோக்குவரத்து அலுவலகம், மாவட்ட தொழில்மையம், அங்கன்வாடி திட்ட அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. மேலும் இச்சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் தேனிநகரில் வசிக்கும் பெண்கள் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய முக்கிய திட்டச்சாலையானது தற்போது மதுக்கடை சாலையாக உள்ளது.

இச்சாலையில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து உள்ளது. இக்கடைகளில் குடித்து விட்டு ஆங்காங்கே மயங்கி, அலங்கோலமாக கிடப்பதும், குடிபோதையில் ஆபாச வார்த்தைகளை பேசி திரிவதும் வாடிக்கையாக உள்ளது. போதையில் தள்ளாடி வரும்போது, வாகனங்களுக்குள் விழும் அபாயமும் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, அதிக முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy