ஊட்டி – கோத்தகிரி சாலையில் எச்சரிக்கை பலகைகள் சீரமைக்கும் பணி மும்முரம்

ஊட்டி – கோத்தகிரி சாலையில் எச்சரிக்கை பலகைகள் சீரமைக்கும் பணி மும்முரம்

ஊட்டி:ஊட்டியில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையோரங்களில் உள்ள வழிகாட்டும் பெயர் பலகை மற்றும் எச்சரிக்கை பலகைகள் சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருகின்றனர். மலை மாவட்டம் என்பதால், ஏராளமான வளைவுகள், கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் விபத்து நிறைந்த வளைவுகள் உள்ளன. அதேபோல், சாலையும் குறுகலாகவும் காணப்படும். இதனால், இச்சாலையோரங்களில் எச்சரிக்கை பெயர் பலகைகள் மற்றும் வழிகாட்டும் பெயர் பலகைகள் அதிகளவு வைக்கப்பட்டிருக்கும்.

இவைகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், கோடை சீசன் நெருங்கிய நிலையில், அனைத்து சாலையோரங்களில் உள்ள பெயர் பலகைகள் சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை இறங்கியுள்ளது.முதற்கட்டமாக ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக சமவெளிப் பகுதிகளுக்கு செல்லும் சாலையோரங்களில் உள்ள பெயர் பலகைகள், விபத்தை தடுக்க உதவும் எச்சரிக்கை பலகைகளை சீரமைப்பது மற்றும் உடைந்த பாகங்களை அகற்றிவிட்டு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எளிதாக வாகனங்களை இயக்கவும், விபத்து ஏற்படுவதை தடுக்கவும் முடியும்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy