வேலூரில் பழைய ரூ.500 நோட்டுகளுடன் தவித்த மூதாட்டிக்கு கரம்கொடுத்த திமுக எம்எல்ஏ நந்தகுமார்

வேலூரில் பழைய ரூ.500 நோட்டுகளுடன் தவித்த மூதாட்டிக்கு கரம்கொடுத்த திமுக எம்எல்ஏ நந்தகுமார்

வேலூர்: பழைய ரூ.500 நோட்டுகளுடன் தவித்து வந்த மூதாட்டிக்கு எம்.எல்.ஏ நந்தகுமார் கரம்கொடுத்துள்ளார். மூதாட்டிக்கு அணைக்கட்டு எல்.எல்.ஏ நந்தகுமார் ரூ.12,000 பண உதவியும்,  காசநோய்க்குச் சிறப்பு மருத்துவ சிகிச்சை கிடைக்கவும் ஏற்பாடு செய்துள்ளார். மூதாட்டி புவனேஸ்வரி வேலூர் சலவன்பேட்டை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர்.

மூதாட்டி ரூ.12,000 மதிப்பில் செல்லாத பழைய ரூ.500 நோட்டுகளை மாற்றித்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்குத் தள்ளாடியபடி வந்துள்ளார். வாடகை வீட்டில் தங்கி கூலி வேலைக்குச் சென்று சிறுகச் சிறுக ரூ.12,000 பணம் சேர்த்து வைத்திருக்கிறேன். பணம் செல்லாது என அறிவித்தது பற்றி எனக்குத் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் காசநோயால் பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன் என்றார் மூதாட்டி. அதனையடுத்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை அழைத்து அந்த மூதாட்டியை விசாரித்துள்ளார். பின்னர் அந்த மூதாட்டியிடம் ரிசர்வ் வங்கி உத்தரவின்படி, பழைய ரூபாய் நோட்டுகளை இனி எக்காரணம் கொண்டும் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தர இயலாது என்று கூறியுள்ளார். இதனால் அந்த மூதாட்டி கண்ணீருடன் வீடு திரும்பினார்.

பின்னர் இது தொடர்பான செய்தி சமூகவலைத்தளங்களில் வெளிவந்தது. இந்த செய்தியை அறிந்து அணைக்கட்டுத் தொகுதி எம்.எல்.ஏ-வும் தி.மு.க மாவட்டச் செயலாளருமான ஏ.பி.நந்தகுமார், மூதாட்டி புவனேஸ்வரியை இன்று நேரில் வரவழைத்து உதவிசெய்துள்ளார். பழைய ரூ. 500 நோட்டுகளைப் பெற்றுக்கொண்ட மூதாட்டிக்கு ரூ.12,000-க்கு புதிய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துள்ளார். மேலும்  காசநோய்க்குச் சிறப்பு மருத்துவ சிகிச்சை கிடைக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy