நீர் பாதுகாப்பு: திருவண்ணாமலை மாவட்டத்துக்கு தேசிய  …4 நிமிட வாசிப்புநீர் பாதுகாப்புக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக திருவண்ணாமலை மாவட்டத்துக்க…

நீர் பாதுகாப்பு: திருவண்ணாமலை மாவட்டத்துக்கு தேசிய …4 நிமிட வாசிப்புநீர் பாதுகாப்புக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக திருவண்ணாமலை மாவட்டத்துக்க…

நீர் பாதுகாப்புக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக திருவண்ணாமலை மாவட்டத்துக்கு ‘ஸ்கோச்’ விருது டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தேசிய அளவில் நிலத்தடி நீர் பாதுகாப்பு, மழை நீர் சேகரிப்பு, நீர் மேம்பாடு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது ஆகியவற்றில் சிறந்த முறையில் விளங்கியது. இதனையொட்டி தேசிய அளவில் ‘ஸ்கோச்’ விருது கிடைத்துள்ளது. இதை புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெற்றுக் கொண்டார்.

இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, “திருவண்ணாமலை மாவட்டத்தின் பொதுமக்கள், விவசாயிகளுக்கு பெரிய ஊக்கம் தரும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் மூலமாகத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, ஒவ்வொரு துளி நீர் பாதுகாக்கப்படும்.

கடந்த ஆண்டு ஜல் சக்தி அபியான் மூலமாக மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மிகச் சிறப்பாக செயல்படுத்தியதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 11.2 மீட்டராக இருந்தது, தற்போது மேலும் 3.4 மீட்டருக்கு உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு தடுப்பணைகள், சிமென்ட் கான்கிரீட் தடுப்பணைகள், நீர் உறிஞ்சி குழிகள், நீர் குட்டைகள், நீர்வரத்து கால்வாய்கள், பண்ணை குட்டைகள், அகழிகள், தனிநபர் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், புனரமைப்பு பணிகள், ஏரிகளில் மரம் நடும் பணிகள் என மொத்தம் ரூ.87 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொதுப்பணித் துறை, நீர்வள ஆதாரத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக 1555 பணிகள் ரூ.44 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நீர் வங்கி ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமாக தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துடன் ஏரிகள், குளங்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 260 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நீர் வங்கியில் பதிவு செய்து அதன் மூலம் 672 நீர் நிலைகள் புனரமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான திருவண்ணாமலையின் ஆட்சியராக கே.எஸ்.கந்தசாமி பொறுப்பேற்றது முதல், மாவட்டத்தை மேம்படுத்த பல்வேறு மேம்பாட்டுப் பணிகளைச் செய்துவருகிறார். குறிப்பாக ஏழைகள், பெண்கள் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்திவருவதாக அவர் குறித்து பாராட்டு பத்திரம் வாசிக்கிறார்கள் திருவண்ணாமலை மக்கள்.

Source: Minambalam.com

Author Image
murugan