சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி – சரண கோஷத்துடன் பக்தர்கள் தரிசித்தனர்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி – சரண கோஷத்துடன் பக்தர்கள் தரிசித்தனர்

மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி தரிசனத்தை சரண கோஷங்கள் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருவனந்தபுரம்:

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் பிரசித்திபெற்றது மகர விளக்கு பூஜை ஆகும்.

இந்த ஆண்டு மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 31-ம் தேதி முதல் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கி நடந்து வருகிறது.

மகர விளக்கு பூஜையின்போது சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். மகரவிளக்கு பூஜையையொட்டி இந்த திருவாபரண பெட்டி பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலை நோக்கி புறப்பட்டது.

இந்நிலையில், இன்று மாலை 6.30 மணிக்கு இந்த திருவாபரண பெட்டி சபரிமலை சன்னிதானத்தை வந்தடைந்தது. பாரம்பரிய முறைப்படி வரவேற்புக்கு பிறகு 18-ம் படி வழியாக திருவாபரண பெட்டி எடுத்துச் செல்லப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சுவாமி ஐயப்பனுக்கு விசே‌ஷ தீபாராதனை காட்டி மகர விளக்கு பூஜை நடைபெற்றது.

மகர விளக்கு பூஜை நடைபெறும் அதே நேரத்தில், சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரிந்தது. சரண கோஷம் முழங்க பக்தர்கள் ஜோதியை தரிசித்தனர்.

மகர விளக்கு பூஜையில் பங்கேற்கவும், மகர ஜோதியை காணவும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.

சபரிமலையில் பக்தர்கள் குவிந்துள்ளதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு ஐ.ஜி., 2 போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan