கிச்சன் கீர்த்தனா: உருளைக்கிழங்கு ஓமப்பொடி மிக்ஸர்4 நிமிட வாசிப்புஉழவர் தின வாழ்த்துகள். கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்று அழைக்கும் நாளைக் க…

கிச்சன் கீர்த்தனா: உருளைக்கிழங்கு ஓமப்பொடி மிக்ஸர்4 நிமிட வாசிப்புஉழவர் தின வாழ்த்துகள். கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்று அழைக்கும் நாளைக் க…

உழவர் தின வாழ்த்துகள். கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்று அழைக்கும் நாளைக் கொண்டாடவிருக்கும் காணும் பொங்கல் திருவிழா அன்று உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல், அவர்களோடு சுற்றுலா செல்வது வழக்கம். முக்கியமாக ஆற்றங்கரை, கடற்கரைகளில் கூடி சிற்றுண்டிகள், பலகாரங்கள் உண்பது இன்றும் தொடரும் இன்ப நிகழ்ச்சி. ஐஸ்க்ரீம், சிப்ஸ், பாப்கார்ன் என இந்த நாளில் பலவற்றையும் வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால், இன்றும் காவிரிக்கரையோர மக்கள் வீட்டிலேயே பலகாரங்கள் செய்து கொண்டு போகும் வழக்கத்தைக் கொண்டுள்ளார்கள். தேன்குழல், அதிரசம்… இவற்றோடு மிக்ஸர் வகைகளும் இதில் கட்டாயம் இருக்கும். இவை கடவுளுக்கான பலகாரங்களாக இல்லாமல் பண்டிகைக்கான பலகாரங்களாகவே செய்யப்படுகின்றன. அந்த வகையில் உருளைக்கிழங்கு ஓமப்பொடி மிக்ஸர் செய்வதை இங்கு காண்போம்.

என்ன தேவை?

பெரிய உருளைக்கிழங்கு – ஒன்று

ஓமம் – ஒரு டீஸ்பூன்

கடலை மாவு – ஒரு கப்

அரிசி மாவு – அரை கப்

கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்

சீரகத்தூள் – கால் டீஸ்பூன்

குழம்பு மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

உப்பு, தண்ணீர் – தேவைக்கேற்ப

மிக்ஸருக்கான பொருள்கள்:

கொள்ளுப் பயறு – அரை கப்

வெள்ளரி விதை – 2 டீஸ்பூன்

வேர்க்கடலை – 50 கிராம்

உடைத்த கடலை (பொட்டுக்கடலை) – 50 கிராம்

பச்சைப் பட்டாணி – 50 கிராம்

கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு

காராபூந்தி செய்ய:

கடலை மாவு – ஒரு கப்

அரிசி மாவு – அரை கப்

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை

குழம்பு மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

முதலில் மிக்ஸருக்கான காராபூந்தியைச் செய்துகொள்வோம். கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள்தூள், குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து தேவையான நீர்விட்டுக் கரைத்து, பூந்தி கரண்டியில் மாவை ஊற்றி வடியும் பூந்திகளை எண்ணெயில் பொரித்தெடுத்துக்கொள்ளவும்.

அதேபோல் வேர்க்கடலை, உடைத்த கடலை, பச்சைப் பட்டாணி, கொள்ளுப் பயறு, வெள்ளரி விதை, கறிவேப்பிலை ஆகியவற்றை சிறிது எண்ணெய் ஊற்றி அதில் மொறுமொறுப்பாக வறுத்தெடுத்துக்கொள்ளவும்.

பிறகு, உருளைக்கிழங்கு ஓமப்பொடி மிக்ஸர் செய்ய, உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும். இதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள கடலை மாவு, அரிசி மாவு, ஓமம், உப்பு, மசாலா பொடிகள் அனைத்தும் சேர்த்து, தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு அழுத்திப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து ஓமப்பொடி அச்சில் மாவை போட்டு பிழிந்தெடுக்கவும். நன்கு பொரிந்து சிவந்து கொரகொரப்பாக வந்ததும் எடுத்து வைக்கவும். இதில் காராபூந்தி, கடலை வகைகளைச் சேர்த்து கலக்கவும். காணும் பொங்கலுக்கு சுவை கூட்டும் பலகாரம் இது.

Source: Minambalam.com

Author Image
murugan