மராட்டியத்தில் 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை அமைக்கப்படும் – அஜித் பவார்

மராட்டியத்தில் 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை அமைக்கப்படும் – அஜித் பவார்

மராட்டியத்தில் இன்னும் 2 ஆண்டுகளில் 350 அடி உயரதிற்கு அம்பேத்கர் சிலை அமைக்கப்படும் என அம்மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

மும்பை:

மும்பை தாதரில் உள்ள இந்து மில்லில் சட்டமேதை அம்பேத்கருக்கு மராட்டிய அரசு பிரமாண்ட நினைவகம் கட்டுகிறது. ரூ.400 கோடி மதிப்பீட்டில் அமைய இருக்கும் அம்பேத்கர் நினைவகத்துக்கு முந்தைய பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி ஆட்சியின் போது பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அந்த இடத்தில் பிரமாண்ட அம்பேத்கர் சிலை நிறுவப்படுகிறது. அம்பேத்கர் நினைவாக பணிகள் 2020-ம் ஆண்டுக்குள் முடியும் என அப்போதைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்து இருந்தார்.

ஆனால் அதற்கான ஆயத்த பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாக அப்போது எதிர்க்கட்சிகளாக இருந்த காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் குற்றம் சாட்டி இருந்தன.

தற்போது மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் புதிய அரசு அமைத்துள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக உள்ளார். துணை முதல்-மந்திரியாக தேசியவாத காங்கிரசின் அஜித்பவார் பதவி ஏற்றுள்ளார்.

இந்நிலையில், மராட்டியத்தில் 350 அடி உயரத்திற்கு அம்பேத்கர் சிலை அமைக்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக துணை முதல்-மந்திரி அஜித் பவார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், “ஏற்கனவே 250 அடியில் சிலை அமைக்கலாம் என பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அது தற்போது 350 அடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சிலைக்கு கீழ் பகுதியில் 100 அடிக்கு அம்பேத்கர் நினைவகம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது. இதனால், மொத்த உயரம் 450 அடி ஆகும். இந்த சிலை 2 வருடங்களில் அமைக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார். 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan