ஆளில்லா விமானங்களை பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

ஆளில்லா விமானங்களை பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

ஆளில்லா விமானம் வைத்திருக்கும் அனைவரும் ஆன்லைன் மூலம் வரும் 31-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். தவறினால் அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் விமான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

புதுடெல்லி :

இந்தியாவில் பொதுமக்கள் வைத்திருக்கும் ஆளில்லா விமானங்களை முறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 31-ந்தேதிக்குள் ஆன்லைன் மூலம் தங்கள் ஆளில்லா விமானங்களை மக்கள் பதிவு செய்ய வேண்டும் என மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஆளில்லா விமானங்கள் மற்றும் அதை வைத்திருப்போரின் அடையாளத்தை அறியும் வகையில், இந்த விவரங்களை தானாக வழங்கும் ஒருதடவை வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே ஆளில்லா விமானம் வைத்திருக்கும் அனைவரும் இந்த ஆன்லைன் பதிவை வருகிற 31-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும். தவறினால் அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் விமான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டு உள்ளது.

ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி சமீபத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்தே ஆளில்லா விமானங்களை பதிவு செய்யும் நடவடிக்கையை அரசு துரிதப்படுத்துவதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தியாவில் சுமார் 60 ஆயிரம் ஆளில்லா விமானங்கள் இருக்கும் என கடந்த ஆண்டு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan