அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 72 பேர் காயம்!3 நிமிட வாசிப்புமதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 72 பேர் வரை காயமடைந்தனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 72 பேர் காயம்!3 நிமிட வாசிப்புமதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 72 பேர் வரை காயமடைந்தனர்.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 72 பேர் வரை காயமடைந்தனர்.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று காலை தொடங்கிவைத்தார். மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்ற பிறகு, காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள மொத்தமாக 730 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்திருந்தனர். மாடுபிடி வீரர்களுக்கு உடற்தகுதி பரிசோதனைகள் நடைபெற்றன. ஒன்பது சுற்றுகள் அடிப்படையில் ஒவ்வொரு சுற்றுக்கும் 75 மாடுபிடி வீரர்கள் என்ற அடிப்படையில் குழுவாகக் களமிறக்கப்பட்டனர். வாடிவாசலிலிருந்து சீறிப் பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் அடக்கினர்.

மாலை 4.30 மணி வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், 610 மாடுபிடி வீரர்களும், 612 காளைகளும் களமிறங்கினர். ஜல்லிக்கட்டில் காளையை அடக்கி வெற்றிவாகை சூடிய வீரர்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், குக்கர், கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.

ஜல்லிக்கட்டில் அதிகபட்சமாக 14 காளைகளைப் பிடித்த ஜெய்கிந்த்புரத்தைச் சேர்ந்த விஜய் சிறந்த மாடுபிடி வீரருக்கான முதல் பரிசைத் தட்டிச் சென்றார். 13 காளைகளை அடக்கிய பரத்குமார் இரண்டாவது பரிசையும், 10 காளைகளைப் பிடித்த திருநாவுக்கரசு மூன்றாவது பரிசையும் பெற்றனர். அவர்களுக்கு விழாக்குழு சார்பில் பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டில் யாரையும் தன் அருகே நெருங்கவே விடாமல், களத்தில் நெடுநேரமாக நின்று காட்டி அனைவரின் பாராட்டையும் பெற்றது புதுக்கோட்டை இன்ஸ்பெக்டரின் காளை. இந்தக் காளைதான் சிறந்த காளையாகத் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் படுகாயமடைந்த 10 பேர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காளைகள் முட்டியதில் 72 பேர் வரை காயமடைந்துள்ளனர். வாடிவாசலிலிருந்து வெளிவரும் காளை, பார்வையாளர்கள் கூட்டத்தில் பாய்ந்ததால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

Source: Minambalam.com

Author Image
murugan