காஷ்மீர் செல்லும் மத்திய மந்திரிகள் – 52 இடங்களில் மக்களுடன் சந்திப்பு

காஷ்மீர் செல்லும் மத்திய மந்திரிகள் – 52 இடங்களில் மக்களுடன் சந்திப்பு

மத்திய மந்திரிகளை காஷ்மீருக்கு அழைத்து சென்று ஆய்வு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாளை மறுநாள் தொடங்கி காஷ்மீருக்கு அடுத்தடுத்து மத்திய மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் குழு பயணம் மேற்கொள்ள உள்ளது.

புதுடெல்லி:

காஷ்மீர் மாநில பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அந்த மாநிலத்துக்கு சிறப்பு சலுகைகள் வழங்க வழிவகை செய்யும் 370-வது சட்ட பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் விலக்கியது.

அதோடு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் மாற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் உருவாகி விடக்கூடாது என்பதற்காக ஏராளமான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. காஷ்மீர் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர்.

சுமார் 5 மாதத்திற்கு பிறகு தற்போது காஷ்மீரில் 90 சதவீத இயல்பு நிலை திரும்பி விட்டது. இதையடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் வெளிநாட்டு பிரதிநிதிகளை காஷ்மீருக்கு அழைத்து சென்று மத்திய அரசு சுற்றி காண்பித்தது.

இதைத் தொடர்ந்து மத்திய மந்திரிகளையும் காஷ்மீருக்கு அழைத்து சென்று ஆய்வு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) தொடங்கி காஷ்மீர் மாநிலத்துக்கு அடுத்தடுத்து மத்திய மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் குழு பயணம் மேற்கொள்ள உள்ளது.

காஷ்மீர் செல்லும் மந்திரிகள் குழுவில் மொத்தம் 36 மந்திரிகள் இடம் பெறுகிறார்கள். 18-ந்தேதி முக்கிய மந்திரிகள் செல்கிறார்கள். 19-ந்தேதி ரெயில்வே மந்திரி பியூஸ்கோயல் செல்கிறார்.

23-ந்தேதி சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் செல்ல உள்ளார். பெண்கள் நல மேம்பாட்டு நல மந்திரி ஸ்மிருதி இரானி உள்பட மற்ற மத்திய மந்திரிகளும் 18-ந்தேதி முதல் 24-ந்தேதிக்குள் காஷ்மீருக்கு சென்று வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் செல்லும் மத்திய மந்திரிகள் 52 இடங்களில் மக்களை சந்தித்து பேச உள்ளனர். ஜம்மு பிராந்தியத்தில் அதிக இடங்களுக்கு செல்ல உள்ளனர். ஸ்ரீநகர் பகுதியில் 8 இடங்களில் மத்திய மந்திரிகள் மக்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கு சுதந்திரமாக சென்று வர இயலவில்லை என்று பல்வேறு கட்சி தலைவர்களும் புகார் தெரிவித்து வருகிறார்கள். சமீபத்தில் 2 நாள் பயணமாக வந்த சர்வதேச குழுவும் காஷ்மீரில் நிலவும் சூழ்நிலைக்கு அதிருப்தி தெரிவித்தது.

குறிப்பாக அரசியல் கட்சி தலைவர்கள் வீடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ளதை குறை கூறினார்கள். இதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய அரசு மந்திரிகள் பயணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan