புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ கட்சியில் இருந்து நீக்கம்

புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ கட்சியில் இருந்து நீக்கம்

புதுச்சேரி: புதுவையில் கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே 3 வருடத்துக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. இதன் காரணமாக ஆட்சியாளர்களின் பல்வேறு திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடப்படுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகின்றன. இதனிடையே பாகூர் தொகுதி ஆளுங்கட்சி எம்எல்ஏவான தனவேலு, கடந்த வாரம் தனது தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் செய்துதரவில்லை என முதல்வருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறினார். பின்னர் கவர்னர் கிரண்பேடியை சந்தித்து ஊழல் புகார் மனு அளிக்க சென்றார். இது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதையடுத்து தனவேலு எம்எல்ஏ மீது புகார் தெரிவிக்க முதல்வர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் இருவரும் டெல்லி சென்றனர். அங்கு முகாமிட்டு புதுச்சேரி நிலவரம் குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து முறையிட்டனர். பின்னர் இருவரும் நேற்று புதுச்சேரி திரும்பிய நிலையில் இன்று காலை புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் தலைவர் நமச்சிவாயம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கட்சி விரோத நடவடிக்கைகளிலும் ஆட்சி கவிழ்க்கும் சதிச்செயலிலும் ஈடுபட்டு வந்த காங்கிரசை சேர்ந்த பாகூர் எம்எல.ஏ தனவேலு பற்றி அகில இந்திய தலைமையிடம் சார்பில் புகார் அளித்தோம். யார் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டாலும் கட்சி அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது.கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட பாகூர் எம்எல்ஏ தனவேலு  கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார் என்றார்.
இந்த சந்திப்பின்போது முதல்வர் நாராயணசாமி உடனிருந்தார்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy