தமிழர் பாரம்பரிய உடையில் பொங்கல் கொண்டாடிய வௌிநாட்டினர்: சோழவந்தானில் உற்சாகம்

தமிழர் பாரம்பரிய உடையில் பொங்கல் கொண்டாடிய வௌிநாட்டினர்: சோழவந்தானில் உற்சாகம்

சோழவந்தான்: சோழவந்தானில் சுற்றுலாத் துறை சார்பில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்ட வெளிநாட்டினர் தமிழர் பாரம்பரிய உடையில் பொங்கல் வைத்தும், நடனமாடியும் மகிழ்ந்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தானில் சுற்றுலாத் துறை சார்பில் நேற்று பொங்கல் பண்டிகை  கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் அமெரிக்கா, சீனா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கறே–்றனர். சுற்றுலா அலுவலர் பாலமுருகன் தலைமையில் அவர்களுக்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தெற்கு ரத வீதி வழியாக அவர்கள் நடந்து சென்றனர். தைத்திருநாளை முன்னிட்டு அப்பகுதியில் பெண்கள் வீட்டு வாசல்களில் வண்ண கோலங்களை வரைந்து அசத்தியிருந்தனர். அவற்றை பார்த்து ஆச்சரியமடைந்த வெளிநாட்டினர், புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.  

பின்னர் ஜெனகை நாராயண பெருமாள் கோயிலுக்கு வந்தனர். அங்கு செயல் அலுவலர் சத்திய நாராயணன், கணக்கர் பூபதி, அர்ச்சகர் ரகுராம் பட்டர் மற்றும் கோயில் பணியாளர்கள் அவர்களை வரவேற்றனர்.  முதல் நிகழ்ச்சியாக உள்ளூர் பெண்களுடன் இணைந்து, அவர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதனையடுத்து நையாண்டி மேளம், சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதனை கண்டு மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள், உற்சாக மிகுதியில் கலைஞர்களுடன் இணைந்து இசைக்கருவிகளை இசைத்தும், நடனமாடியும் மகிழ்ந்தனர்.

விழாவில் கலந்து கொண்ட நெதர்லாந்து நாட்டை சேர்ந்த அலெக்ஸ்(28) கூறுகையில், ‘‘பொங்கல் பண்டிகையில் கலந்து கொள்வதற்காகவே மனைவியுடன் இங்கு வந்துள்ளேன். தமிழர்களின் உபசரிப்பு, உணவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் வெகுவாக கவர்ந்து விட்டன. நாளை அலங்காநல்லூரில் நடக்க உள்ள ஜல்லிக்கட்டை பார்க்க ஆவலாக உள்ளோம்’’ என்றார்.
சீனாவைச் சேர்ந்த கோ வைசாங் வெங்க்(20) கூறுகையில், ‘‘இந்தியாவிற்கும், எங்கள் நாட்டிற்கும் பல நூற்றாண்டுகளாக கலை மற்றும் கலாசார தொடர்பு உள்ளது. என் தமிழ் மொழி, மற்றும் தமிழர்களின் தொன்மையான வரலாறு குறித்து கூறி, பெற்றோர்கள் என்னை இங்கு சுற்றுலா அனுப்பியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி. அடுத்த வருடமும் வருவேன்” என்றார்.

விழாவில் ஓட்டல் தமிழ்நாடு மேலாளர் குணேஸ்வரன், தானம் அறக்கட்டளை வாசுநாதன், பாரதி, வாசுதேவன், செந்தில்நாதன், ரிஸ்வான்  உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுலா அலுவலர்  பாலமுருகன், உதவி அலுவலர்கள் அன்பரசு, ரவி  மற்றும் பணியாளர்கள்  செய்திருந்தனர்.  

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy