தஞ்சையில் பொங்கல் திருநாளில் பயங்கரம் டாஸ்மாக் கடை முன் 2 பேர் வெட்டிக்கொலை

தஞ்சையில் பொங்கல் திருநாளில் பயங்கரம் டாஸ்மாக் கடை முன் 2 பேர் வெட்டிக்கொலை

* சமரசம் செய்தவரும் பலியான பரிதாபம்
* முன்விரோதத்தில் 4 பேர் கும்பல் வெறிச்செயல்

தஞ்சை: பொங்கல் திருநாளான நேற்று தஞ்சையில் டாஸ்மாக் கடை வாசலில் 2 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.  சமரசம் செய்யவந்தவரையும் பரிதாபமாக கொன்று விட்டனர். இது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை வடக்கு வாசல் பழைய நெல்லுமண்டி தெருவை சேர்ந்த பெஞ்சமின் மகன் செபஸ்டின்(30). கூலி தொழிலாளி. இந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கும், அருகில் உள்ள வடக்கு வாசலை சேர்ந்தவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று வடக்கு வாசலை சேர்ந்த செல்வம் (எ) செல்வகுமார், வெங்கடேஸ்வரன், பச்சைக்கிளி(எ) சூர்யா, சுந்தர்(எ) சுந்தரமூர்த்தி ஆகியோர் நெல்லுமண்டி தெரு வழியாக சென்றனர்.

இவர்களை பார்த்ததும் ஏன் இந்த வழியாக வருகிறீர்கள் என்று செபஸ்டின் கேட்டார். இதனால் அவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் 4 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். அப்போது பச்சைக்கிளியின் செல்போன் தவறி கீழே விழுந்து விட்டது. அதை செபஸ்டின் எடுத்து வைத்திருந்தார். இதையடுத்து இன்னொரு செல்போனில் இருந்து பச்சைக்கிளி தனது செல்போனை தொடர்பு கொண்டார். அப்போது செபஸ்டின் எடுத்து பேசி, இங்கு வந்து செல்போனை வாங்கிக்கொள் என்றார். அதற்கு அதே பகுதியில் சுடுகாடு அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு செல்போனுடன் வா என அழைத்தார். இதையடுத்து நேற்று மாலை செபஸ்டின் செல்போனுடன் டாஸமாக்கடைக்கு சென்றார். டாஸ்மாக்  வாசலில் மீண்டும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது.

அங்கு மது அருந்த வந்திருந்த வடக்கு வாசல் பழைய நெல்லுமண்டி தெருவை சேர்ந்த காளிதாஸ் மகன் கூலி தொழிலாளி சக்திவேல்(36) அவர்களிடம் சமரசம் செய்தார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றியது. ஆத்திரமடைந்த 4 பேரும், தாங்கள் எடுத்து வந்திருந்த அரிவாளால் செபஸ்டினை சரமாரி வெட்டினர். மேலும் சக்திவேலும் அவரது ஆள் தான் என நினைத்து அவரையும் வெட்டிவிட்டு ஓடி விட்டனர். இதில் பலத்த காயமடைந்த 2 பேரையும் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே சக்திவேல் இறந்தார். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த செபஸ்டின் இன்று காலை இறந்தார். இதுபற்றி தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிந்து செல்வம், வெங்கடேஸ்வரன், சூர்யா, சுந்தர் ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர். டாஸ்மாக்கடை முன் 2 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy