எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு – 20 போலீசாரை கொல்ல சதித்திட்டம் என விசாரணை அதிகாரி ஸ்ரீநாத் தகவல்

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு – 20 போலீசாரை கொல்ல சதித்திட்டம் என விசாரணை அதிகாரி ஸ்ரீநாத் தகவல்

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபீக்கிடம் நடந்த விசாரணையில், 20 போலீசாரை கொல்ல சதித்திட்டம் தீட்டிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

நெல்லை:

களியக்காவிளையில் சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரிடம் காவல்துறை நடத்திய விசாரணை இன்று இரவு நிறைவு பெற்றது. இதனையடுத்து இருவரையும் குழித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில்,  நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளோம். கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் இன்னும் பறிமுதல் செய்யப்படவில்லை.

அப்துல் சமீம், தவுபீக்கிடம்  நிறைய விசாரிக்க வேண்டியுள்ளது. கேள்விகளும் கேட்கப்பட வேண்டியுள்ளது. அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கைதான இருவரும் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தனர்.  இருவருக்கும் எந்த பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது என்பது பற்றியும் விசாரிக்க வேண்டி உள்ளது என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, விசாரணை அதிகாரி ஸ்ரீநாத் கூறுகையில், விசாரணையில் 20 போலீசாரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கைதான தீவிரவாதி அப்துல் சமீம்  மீது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கூட்டாளிகளை கைது செய்ததால் காவல் துறையை பழிவாங்க பயங்கர திட்டம் தீட்டப்பட்டது தெரிய வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan