உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த உயர்நீதிநீதி மன்றம்

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த உயர்நீதிநீதி மன்றம்

சென்னை: நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள், மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக உள்ளதாகவும், அதில் முறைகேடுகள் செய்ய வாய்ப்புகள் இல்லை எனவும் மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, வீடியோ பதிவு செய்ய கோரிய வழக்கும், முடிவுகள் அறிவிக்கப்படாத இடங்களில் முடிவுகள் அறிவிக்க கோரியும் திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி சத்யநாராயணன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, மறைமுக தேர்தல் நடத்தப்படாத 335 பதவிகளுக்கு வரும் 30ம் தேதி தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும், அதில் கூறியுள்ளபடி, நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

மேலும், உள்ளாட்சி தேர்தலில் நான்கு வாக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஒரே பெட்டியில் போடப்படுவதால், குழப்பங்கள் ஏற்படுவதாகவும், தனித்தனியாக பெட்டிகள் வைக்க கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்ததாகவும் குறிப்பிட்டார்.

ஆனால், இந்த வழக்கில் இக்கோரிக்கை தொடர்பாக பரிசீலிக்க கூடாது என தேர்தல் ஆணையம் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆட்சேபம் தெரிவித்தார்.

image“விட்டா கிறுக்கனாக்கிடுவாய்ங்கே போல”.. கோபாலுடன்.. கத்திப்பாராவை சுத்தும் பச்சை சட்டை “நேசமணி”!

மேலும், வாக்கு எண்ணிக்கையின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகள் பாதுகாப்பாக மாவட்ட ஆட்சியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அவற்றில் முறைகேடுகள் செய்ய வாய்ப்பில்லை எனவும் தேர்தல் ஆணைய வழக்கறிஞர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி சத்தியநாராயணன், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க அவசியமில்லை என கூறி, வழக்கை முடித்து வைத்தார்.

Source: OneIndia

Author Image
vikram