Press "Enter" to skip to content

மோடி அரசை முதல்ல அடிக்கணும்!?: மேடையேறி, மைக்கை பிடித்து அடுத்த பஞ்சாயத்தை இழுத்த ஸ்டாலின்?

தி.மு.க.வின் பிதாமகன்களான அண்ணாதுரையும், கருணாநிதியும் பொதுக்கூட்ட உரை ஆற்றுகிறார்கள் என்றால்  நூறு மைல்களுக்கு அப்பால் இருந்தும் வண்டி கட்டிக் கொண்டு வருவார்கள் மக்கள். அவர்கள் தி.மு.க.வின் அனுதாபிகள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அண்ணா, கருணாநிதியின் பேச்சாற்றலின் ரசிகப்பிள்ளைகள். இப்படித்தான் பேசிப்பேசி வளர்ந்தது  தி.மு.க. அதன் தற்போதைய தலைவராக இருக்கும் ஸ்டாலின் மேடையேறுறி பேசுகையில், இப்போதெல்லாம் சில நேரங்களில் வார்த்தைகள் குழம்பிவிடுவதால் நகைப்புக்கும், விமர்சனத்துக்கும் ஆளாகிறார்.  சில நேரங்களில் அவரது பேச்சானது சர்ச்சையில் முடிகிறது. இப்போதும் அப்படித்தான் மத்திய அரசுக்கு எதிராக ஸ்டாலின் தடித்த வார்த்தைகளில் பேசிவிட்டார்! என்று ஒரு பஞ்சாயத்துக்கு உருவாகியுள்ளது. என்ன விவகாரம்?….

தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜாவின் மகன் திருமணத்தில் கலந்து கொண்டார் ஸ்டாலின். அப்போது மணமக்களை வாழ்த்திவிட்டு, வழக்கம்போல் மாநில மற்றும் மத்திய அரசுகளை ஒரு பிடி பிடித்தார். தன் உரையின் நடுவில் ‘மத்திய அரசு, மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும் மக்களை பிரிக்கும் கொடுமையான சட்டதிட்டங்களை நிறைவேற்ரி வருகிறது. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் நம் மாநில அரசோ, அந்த சட்டமசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று ஒரு தனிநபர் தீர்மானமாக நான் எழுதிக் கொடுத்ததை எடுத்துக் கொள்ளவே இல்லை. எவ்வளவுதான் அயோக்கியத்தனம், கொள்ளை, கொலை, ஊழல் செய்திருந்தாலும், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பான தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றினால், நானே மனமுவந்து அ.தி.மு.க. அரசை பாராட்ட தயாராக இருக்கிறேன்.” என்றவர், ‘மத்திய அரசை எதிர்க்க முடியாத நிலையில் தமிழகத்தில் ஒரு ஆட்சி இருக்கிறது. இந்த லட்சணத்தில் ‘நான் சிறப்பாக ஆட்சி செய்கிறேன். விருதுகளை வாங்குகிறேன்’ என முதல்வர் இ.பி.எஸ். பெருமைப்படுகிறார். இந்த அரசுக்கு விருது தந்தவர்களை தான் முதலில் அடிக்க வேண்டும். நம் உரிமையை தட்டிப்பறிக்க கூடிய நிலை. உரிமைகள் பறிபோய்க் கொண்டிருக்கிறது. அதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை மாநில அரசு எடுப்பதில்லை.” என்று ஆவேசப்பட்டார். 

ஸ்டாலினின்  இந்த பேச்சுக்கு எதிராக கிளர்ந்து எழுந்திருக்கும் பா.ஜ.க. ‘தமிழக அரசுக்கு விருது தந்திருக்கும் மத்திய அரசைதான் முதலில் அடிக்க வேண்டும்! என ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய அரசென்றால் அது சர்வதேச வல்லமை படைத்த நரேந்திர மோடியின் அரசுதானே! மோடியின் ராஜ்ஜியத்தை இவர் அடித்து வீழ்த்திவிடுவாரா? தன் கட்சியிலேயே துரோகம் இழைக்கும் நிர்வாகிகளை களையெடுக்க திராணியில்லாத ஸ்டாலின், நமோவை வீழ்த்திடுவாரா? இந்த வாய்த்துடுக்கு பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்கணும்.” என்று பொங்குகின்றனர். ஆனால் தி.மு.க. தரப்போ “தமிழக அரசுக்கு விருது தந்தவர்களைதான் முதலில் கேட்க வேண்டும்! என்றுதான் தளபதி அவர்கள் கூறினார். சிலர் திரித்து பேசுகின்றனர்.” என்கிறார்கள். ஆனால் ஸ்டாலின் பேசும் வீடியோவை காட்டும் பா.ஜ.க.வோ, அவர் அடிக்க வேண்டும்! என்றுதான் பேசியிருக்கிறார். மத்திய அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டுகிறார், சிறுபான்மையினர் நிகழ்ச்சி என்றாலே ஸ்டாலினுக்கு இப்படித்தான் வாய் நீண்டுவிடும்! என்று கொதிக்கிறார்கள். ஹும்! மறுபடியும் முதல்ல இருந்தா?

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »