Press "Enter" to skip to content

கொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106

பீஜிங்: சீனாவில், கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை, ஒரே இரவில் கிட்டத்தட்ட 60 சதவீதம் அதிகரித்துள்ளது. சோதனை கருவிகளின் பற்றாக்குறை நிலவுவதால், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

அதிகாரப்பூர்வமாக வெளியான தகவல்படி, கடந்த ஒரே இரவில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கிட்டத்தட்ட 60 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸால் தங்கள் நாட்டில், 106 பேர் இறந்துவிட்டதாக சீனா இன்று தெரிவித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 81 என்ற அளவில்தான் இருந்தது.

சீனாவில் பெரும் பாதிப்பு

சீனாவின், மத்திய நகரமான வுஹானில் தோன்றி நாடு முழுவதும் பரவி வருகிறது கொரோனா வைரஸ். எனவே, மத்திய சீன மாகாணமான ஹூபேயில் பெரும்பாலான பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. வுஹான் உட்பட பல நகரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. மொத்த பாதிப்பில், 2,714 நோயாளிகள் ஹூபே பகுதியில்தான் உள்ளனர். அண்டை நாடான, தாய்லாந்தில், 14 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற நாடுகள்

சீனாவின் நிர்வாக பகுதியான ஹாங்காங்கில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா, தைவான், ஆஸ்திரேலியா மற்றும் மக்காவ் ஆகியவற்றில் தலா ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் மலேசியா நாடுகளில் தலா 4 பாதிப்பு, பதிவாகியுள்ளன; ஜப்பானில் ஏழு, பிரான்சில் மூன்று, கனடா மற்றும் வியட்நாமில் தலா 2 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேபாளம், கம்போடியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சீனா தவிர பிற நாடுகளில் எந்த இறப்பும் நிகழவில்லை என்பது சற்று நிம்மதியளிக்க கூடிய செய்தியாகும்.

ரயில் சேவை, பஸ் சேவை நிறுத்தம்

ஹாங்காங்கிற்கும், சீனாவின் பிரதான பகுதிக்கும் இடையிலான அதிவேக ரயில்கள் மற்றும் பிற ரயில் சேவைகளை நிறுத்தி வைப்பது, விமானங்களின் எண்ணிக்கையில் 50 சதவீதம் குறைப்பு மற்றும் பல பயணிகளுக்கு சுற்றுலா விசாக்கள் மீதான தடை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாத சீனாவின் ஒரே பிராந்தியம் திபெத் ஆகும். நோய் பரவாமல் இருக்க அனைத்து சுற்றுலா தளங்களையும் திபெத் புகுதியில், தற்காலிகமாக மூடியுள்ளதாக சீன செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷாங்காய், பெய்ஜிங் உள்ளிட்ட முக்கிய சீன நகரங்கள் நீண்ட தூர பேருந்து சேவைகளை நிறுத்தி வைத்துள்ளன.

இந்திய மாணவர்கள்

சீனாவின் வுஹான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் 8 இந்திய மாணவர்கள் அடங்கிய குழு, தங்களின் தங்குமிடத்தில் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையாக இருப்பதால், தங்களை விரைவாக மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வீடியோக்களை வெளியிட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் பாதிப்பு இல்லை

இதனிடையே, கொரோனா வைரஸால் பீதியடையத் தேவையில்லை, இந்தியாவில் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என்று, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். “கொரோனா வைரஸ் இந்தியாவுக்கு வராததால் நாட்டு மக்கள் பீதியடைய வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். மக்களை பாதுகாக்க அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். காய்ச்சலின் சிறிய அறிகுறிகள் தென்பட்டாலும் அவர்கள், தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

கொரோனா இல்லை

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதாக இதை எடுத்துக்கொள்ள வேண்டாம். இவை வெறும் சந்தேகத்திற்கிடமானவை. மருத்துவ பராமரிப்புக்காக சில காலம் தனிமைப்படுத்தப்பட வேண்டும். சந்தேகத்திற்கிடமானவர்கள் ரத்த மாதிரிகள், புனே நகரிலுள்ள, தேசிய வைரஸ் நிறுவனத்திற்கு சோதனைக்காக அனுப்புகிறோம். இதுவரை அனைத்து முடிவுகளும் நெகட்டிவாக வந்துவிட்டன, ” என்று ஹர்ஷ் வர்தன் கூறினார்.

தயார் நிலையில் இந்தியா

வுஹானில் இருந்து இந்தியர்களை, அதிலும் பெரும்பாலும் மாணவர்களை வெளியேற்றும் பணியை துவங்கும்பொருட்டு பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம், சீன அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று தெரிவித்தார். “நமது தூதரகம் சீன அரசாங்கத்துடன் தொடர்பில் உள்ளது. நாங்கள் வுஹான் நகரத்திற்கு, ஒரு ஏர் இந்தியா விமானத்தை அனுப்பி இந்தியர்களை வெளியேற்ற முயற்சிக்கிறோம், அவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள். முயற்சிகள் நடந்து வருகின்றன. மிக விரைவில் சில தீர்வுகள் காணப்படும் ” என்று ஜெய்சங்கர் கூறினார்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »