அமிர்தி காட்டு பகுதியில் திக்.. திக்… மாணவியை காதலன் உட்பட 4 பேர் கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி

அமிர்தி காட்டு பகுதியில் திக்.. திக்… மாணவியை காதலன் உட்பட 4 பேர் கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி

* காப்பாற்றி பெற்றோரிடம் ஒப்படைத்த முதியவர்

வேலூர்: அமிர்தி காட்டு பகுதியில் கல்லூரி மாணவியை காதலன் உட்பட 4 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் அடுத்த அமிர்தியில் உள்ள வன உயிரின பூங்காவுக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். காலை முதல் மாலை வரை மட்டுமே வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலர்களான வேலூர் கல்லூரி மாணவியும், மாணவனும் அமிர்தி வன உயிரின பூங்காவை சுற்றிப்பார்க்க வந்துள்ளனர். பூங்காவில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்கு இருவரும் சென்றனர். அங்கு ஏற்கனவே 3 வாலிபர்கள் இருந்தனர். காதலனுடன் சேர்ந்து 4 பேரும் மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளனர். அப்போது, அவர்களிடமிருந்து அந்த மாணவி தப்பித்து ஆடைகள் கிழிந்த நிலையில் தன்னை காப்பாற்றுமாறு கதறி அழுதபடி ஓடிவந்தார். ஆனாலும், அவரை விடாமல் 4 பேரும் துரத்தி வந்தனர்.

அப்போது, அமிர்தி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் விறகு வெட்டிக்கொண்டு இருந்தார். அவர் தண்ணீர் குடிக்க ஓடைப்பகுதிக்கு சென்றபோது, இளம்பெண்ணின் கூக்குரல் கேட்டு அதிர்ச்சியடைந்தார். அந்த மாணவி முதியவரின் பக்கத்தில் ஓடிவந்துள்ளார். உடனே முதியவர், விறகு வெட்ட வைத்திருந்த கத்தியை காட்டி அந்த 4 பேரையும் எச்சரித்தார். இருப்பினும் அவரை தாக்க இளைஞர்கள் வந்தனர். அவர் தொடர்ந்து விசில் அடிக்கவே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். உடனே 4 பேரும் தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களை துரத்திச் சென்று ஒருவரை மட்டும் மடக்கிப்பிடித்தனர். மற்ற 3 பேரும் தப்பிவிட்டனர்.

பிடிபட்டவரை சரமாரியாக அடித்து உதைத்த பொதுமக்கள், விறகு கட்டை அவரது தலையில் வைத்து 6 கி.மீ தூரம் நடந்தே கிராமத்திற்கு அழைத்து வந்தனர். அங்கும் பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். மாணவியின் பெற்றோருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ராணிப்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர் இரவு 8.30 மணியளவில் சம்பவ இடத்துக்கு காரில் வந்தனர்.  மாணவிக்கும், அவரது பெற்றோருக்கும் அறிவுரை கூறி இரவு 10.30 மணியளவில் கிராம மக்கள் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அந்த மாணவியை காப்பற்றிய முதியவர் கூறுகையில் பிடிபட்டவன் வேலூர் வேலப்பாடி பகுதியைச் சேர்ந்தவன், இளம்பெண்ணின் காதலனும் அவன் தான் என்று தெரிந்தது. அவன் தான் மற்ற 3 பேரையும் அழைத்து வந்துள்ளான். அந்த இளம்பெண்ணை காப்பாற்றி பெற்றோரிடம் ஒப்படைத்தது பெரிய விஷயம். இனிமேல் காதலனுடன் இளம்பெண்கள் யாரும் வனப்பகுதிக்கு வரக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

தொடரும் பயங்கரம்

வேலூர் கோட்டை பூங்கா பகுதியில் இரவு நேரத்தில் காதலனை தாக்கிவிட்டு இளம்பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் கூட்டு  பலாத்காரத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரிகளில் காவல்துறை, தொண்டு அமைப்பினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், காதல் என்ற வலையில் விழுந்து இதுபோன்ற சம்பவங்களில் இளம்பெண்கள் சிக்கிவிடுகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy