பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு திருநாவுக்கரசு உள்பட 5 பேருக்கு  1000 பக்க குற்றப்பத்திரிகை நகல்: முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றம்

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு திருநாவுக்கரசு உள்பட 5 பேருக்கு 1000 பக்க குற்றப்பத்திரிகை நகல்: முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கோவை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான திருநாவுக்கரசு உள்பட 5 பேருக்கு 1000 பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து விசாரணை கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பொள்ளாச்சியில் கடந்த பிப்ரவரி மாதம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதனை ஆபாச படமெடுத்ததாக  திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஸ் மற்றும் மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் 5 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. சமீபத்தில் குண்டர் தடுப்பு சட்டம் நீக்கப்பட்டது.  இந்த வழக்கை பொள்ளாச்சி போலீசார் விசாரித்து வந்தனர். அதன்பின்னர் சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. கைதான 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது நீதிமன்ற காவல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையொட்டி அவர்கள் சேலம் மத்திய சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது 5 பேரின் காவலை 28ம் தேதி (நேற்று) வரை நீட்டித்தும், அவர்களை நேரில் ஆஜர்படுத்தவும் தலைமை குற்றவியல் நீதிபதி ரவி உத்தரவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து திருநாவுக்கரசு உள்பட 5 பேரும் சேலம் மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு ேகாவை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ரவி அடுத்த மாதம் 11ம் தேதி வரை 5 பேரையும் காவலில் வைக்க உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக 5 பேர்  மீதும் கோவை தலைமை குற்றவியல்  நடுவர் நீதிமன்றத்தில் கடந்த மே 24ம்  தேதி குற்றப்பத்திரிகை  தாக்கல் செய்யப்பட்டது. 1000 பக்கங்கள் கொண்ட  அந்த குற்றப்பத்திரிகையின் நகல்  தமிழில் 5 பேருக்கும் வழங்கப்பட்டது.  இவ்வழக்கை விசாரிக்கும் அதிகாரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உள்ளதால் அங்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி  11ம் தேதி முதல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு  விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy