Press "Enter" to skip to content

கலைஞர் இருந்திருந்தால் பாராட்டியிருப்பார்: வேலுமணி …5 நிமிட வாசிப்புஸ்டாலின் தன்னை எதிரியாகப் பார்ப்பது பெருமையாக உள்ளது என உள்ளாட்சித் துறை அமைச்சர…

ஸ்டாலின் தன்னை எதிரியாகப் பார்ப்பது பெருமையாக உள்ளது என உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தமிழக நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் அவற்றின் முன்னேற்ற நிலை குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று (ஜனவரி 28) மாநில அளவிலான பணி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேலுமணி, “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பின் தங்கியிருந்த தமிழகம் தற்போது இந்திய அளவில் முன்னோக்கி வந்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கோவை, ஈரோடு, வேலூர் ஆகிய மூன்று மாநகராட்சிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கூட்டுக் குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட திட்டங்களை துரிதப்படுத்த அறிவுறுத்தினேன். சென்னையில் 8.7 லட்சம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நீர்நிலைத் திட்டங்களை விரைந்து முடிப்பதன் மூலம் சென்னை பகுதியில் மட்டும் ஒரு டிஎம்சி நீரைத் தேக்கிவைக்கலாம். உள்ளாட்சித் துறையில் தமிழகம் 107 விருதுகளை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளது” என்று தெரிவித்தார்.

நல்லாட்சி விருது குறித்து ஸ்டாலின் விமர்சித்துள்ளாரே என்ற கேள்விக்கு சிரித்தபடியே பதிலளித்த வேலுமணி, “பல்வேறு சோதனைகளைக் கடந்து துணை முதல்வர் பன்னீர்செல்வம் உறுதுணையோடு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம் என்று விருது வாங்கியுள்ளார். இதற்கு பல்வேறு தலைவர்களும் பாராட்டு தெரிவித்தார்கள். கலைஞர் இருந்திருந்தால், சில குறைகள் சொன்னாலும்கூட அரசை பாராட்டியிருப்பார். ஆனால், ஸ்டாலினின் விமர்சனம் யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் உள்ளது” என்று தெரிவித்தார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள அரசூரில் அமைச்சர் வேலுமணியை விமர்சித்ததற்காக திமுக நிர்வாகி முத்துராமலிங்கம் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின், வேலுமணி அறிவுறுத்தல்படி காவல் துறை செயல்படுவதாகவும், இன்னும் ஒரு திமுகவினரை கைது செய்தால் தானே நேராக வந்து போராடுவேன் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாகவும் பேசிய வேலுமணி, “ஸ்டாலின் அறிக்கை வெளியிட்ட பிறகுதான் கோவையில் அப்படி ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதே எனக்குத் தெரியும். அதன் பிறகு எங்கள் கட்சிக்காரர்களிடம் பேசினேன். அரசை விமர்சித்தால் மன்னித்துவிட வேண்டியதுதானே, ஏன் வழக்கு பதிவு செய்யும் அளவுக்குப் பெரிதுபடுத்தினீர்கள் என்று சொன்னேன். ஒருவர் புகார் அளித்தால் அதுதொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கிறார்கள். கோவை மாவட்டத்தில் காவல் துறையினருக்கு நான் எந்தவித அறிவுறுத்தலும் வழங்குவதில்லை” என விளக்கம் அளித்தார்.

மேலும், “ நான் ஒரு சாதாரணமானவன். ஸ்டாலின் மிகப்பெரிய தலைவரின் மகன். அவர் என்னை பெரிய எதிரியாக நினைத்துக்கொள்வது மிகவும் பெருமையாகத்தான் உள்ளது. எப்போதும் என் மீதுதான் அதிக பொய் வழக்குகளைப் போடுகிறார்கள். என்னை குறிவைத்துதான் செயல்படுகிறார்கள். ஆனாலும், இதை அரசியல் ரீதியாக ஆரோக்கியமானதாகத்தான் நான் எடுத்துக்கொள்கிறேன்” என்றும் தனது பேட்டியில் குறிப்பிட்டார் வேலுமணி.

Source: Minambalam.com

More from செய்திகள்More posts in செய்திகள் »