கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க மதுரை அரசு மருத்துவமனையில் தனி வார்டு தொடக்கம்

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க மதுரை அரசு மருத்துவமனையில் தனி வார்டு தொடக்கம்

மதுரை: கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை டீன் சங்குமணி தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கின்ற கரோனா வைரஸ் தொடர்பாக இந்தியா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரையில் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வரக்கூடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை முன்னெடுத்துள்ளது. சீனாவில் கரோனா வைரஸ் தாக்கத்தால் அங்குள்ள மக்கள் அடுத்தடுத்து பலியாகி வருகின்றனர். இந்த வைரஸ் நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால் உலக நாடுகள் சீனாவில் இருந்து தங்கள் நாடுகளுக்கு வருவோரை கண்காணித்து அவர்களை பரிசோதனை செய்து அறிகுறி தென்பட்டாலே அவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கின்றன. அதன் ஒரு நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக சீனா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரக்கூடிய பயணிகளை விமான நிலையத்திலேயே வைத்து அவர்களை சோதனை செய்கின்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் என்பது காய்ச்சல் சம்மந்தமான நோய் என்பதால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் வெப்பநிலை அதிகளவில் இருக்கும். ஆதலால் அந்த வெப்பத்தை கண்டறிவதற்கான கருவிகள் கொண்டு பயணிகள் சோதனை செய்யப்படுகின்றனர். இதனை தொடர்ந்து, பயணிகளிடம் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் அவர்களை உடனடியாக அனுமதிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக சுகாதாரத்துறை உத்தரவுபிறப்பித்தது. இந்த அடிப்படையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நுரையீரல் பிரிவு 120ம் வார்டில் தற்போது 6 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை மதுரை அரசு மருத்துவமனையின் டீன் சங்குமணி தொடங்கிவைத்தார். 6 படுக்கை வசதிகள் கொண்ட இந்த சிறப்பு வார்டில் கிட்டத்தட்ட 19 மருத்துவர்கள் பணியில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொடர்பாக நோய் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy