உயர்மின் கோபுர பணிக்கு அதிக இழப்பீடு வழங்கக்கோரி தாலி ஒப்படைக்கும் போராட்டம்

உயர்மின் கோபுர பணிக்கு அதிக இழப்பீடு வழங்கக்கோரி தாலி ஒப்படைக்கும் போராட்டம்

திருப்பூர்: திருப்பூர் செம்மிபாளையம் பகுதியில் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தாலி ஒப்படைக்கும் போராட்டம் நடந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் செம்மிபாளையம் கிராமத்தில் விளை நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கான அளவீட்டுப் பணிகளை பவர்கிரிட் நிறுவனத்தினர்  மேற்கொள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பகுதியில் 6 டவர் அமைக்க 30 விவசாயிகளின் நிலம் 200 ஏக்கர் கையகப்படுத்தப்பட்ட உள்ளது. அதோடு தங்களது வீடுகளை காலி செய்து கால்நடைகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட புறப்பட்டு வந்தனர். இந்த நிலையில், அன்றைய தினம் பல்லடம் அருகே அவர்களை வழிமறித்த மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் பல்லடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் 22ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண உறுதியளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், கூட்டத்தில் தீர்வு ஏற்படவில்லை.
இந்நிலையில், நேற்று அப்பகுதியில் 300 போலீசார் பாதுகாப்புடன் பவர் கிரீட் நிறுவனத்தினர் வேலை துவக்க சென்றனர். இதனால், ஆத்திரம் அடைந்த விவசாயிகள் நேற்று மாலை தங்களது குடும்ப பெண்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த பெண்கள் மஞ்சள் கட்டிய மஞ்சள் கயிற்றை கையில் பிடித்தபடி வந்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார், உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்க ஒருங்கிைணப்பாளர் பழனிசாமி தலைமையில் இந்த போராட்டம் நடந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் கவிதா விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் 10 பேரை மட்டும் கலெக்டரை சந்திக்க அனுமதித்தனர். இதையடுத்து 10 பேர் கலெக்டரை சந்தித்தனர்.
 
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: கலெக்டர்  தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 2013ம் ஆண்டு புதிய நிலம் எடுப்பு  சட்டத்தின் கீழ் விளை நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க  வேண்டும். கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு அதிகமாக  உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் இழப்பீடு  மிகவும் குறைவாக உள்ளது. எனவே  புதிய சட்டப்படி கோவை மாவட்டத்தில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையையே  திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். இல்லையெனில் எங்கள்  உயிரினும் மேலான இடத்தை இழப்பதும் ஒன்று எங்களது தாலியை ஒப்படைப்பதும்  ஒன்றுதான். எனவே எங்களது தாலியை வைத்துக்கொள்ளுங்கள்.

நாங்கள் கலெக்டரை சந்தித்தபோது தமிழக அரசிடம் இதுபற்றி தெரிவிப்பதாக கலெக்டர் தெரிவித்தார். அவ்வாறு அரசு அதிக இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்தால் நான் செயல்படுத்துகிறேன் என்று கூறி உள்ளார். ஆகையால் அதுவரை உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தி வைக்குமாறு கலெக்டரிடம் கேட்டுக்கொண்டோம். ஆனால் அவ்வாறு செய்ய முடியாது என கலெக்டர் மறுத்துவிட்டார். ஆகையால் எங்களது எதிர்ப்பை மீறி உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றால் அதை தடுத்து நிறுத்துவோம். இவ்வாறு  விவசாயிகள் தெரிவித்தனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy