வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம்: மீனாட்சியம்மன் கோயிலில் துவங்கியது தெப்பத்திருவிழா

வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம்: மீனாட்சியம்மன் கோயிலில் துவங்கியது தெப்பத்திருவிழா

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தைப்பூச தெப்பத்திருவிழா நேற்று  கொடியேற்றத்துடன் துவங்கியது. தண்ணீர் நிரப்பி தயாராக வைக்கப்பட்டுள்ள வண்டியூர் தெப்பத்தில் பிப். 8ல் தெப்ப உற்சவம் நடக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா நேற்று காலை 10.35 மணிக்கு, வேத மந்திரங்கள் முழங்க  கொடியேற்றப்பட்டு சிறப்பு தீபாராதனையுடன் துவங்கியது. அம்மன், சுவாமி சிம்மாசனம் வாகனங்களில் உலா வந்து, கோயிலுக்குள் குலாலர் மண்டபத்தில் எழுந்தருளினர். மாலையில் அம்மன் சிம்ம வாகனத்திலும், சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும் எழுந்தருளினர். தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகளுடன் இரவில் 4 சித்திரை வீதிளிலும் புறப்பாடாகி வீதி உலா வந்தனர்.

இதேபோல், சுவாமி, அம்மன் தினமும் காலை, மாலை வேளைகளில் சித்திரை வீதிகளில் வலம் வருகின்றனர்.  திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தெப்ப உற்சவம் பிப். 8ம் தேதி நடக்கிறது. இதற்கென மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பி தயாராக வைக்கப்பட்டுள்ளது. அன்று அதிகாலை 5.30 மணிக்கு அம்மன், சுவாமி பஞ்ச மூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி, மாரியம்மன் தெப்பக்குளம் சென்று சேர்கின்றனர். அங்கு சிறப்பு பூஜைகளுக்குப்பிறகு அலங்கரித்த தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

தெப்பத்தை சேவார்த்திகளால் வடம் பிடித்து, காலையில் இருமுறையும், மதியம் ஒருமுறையும் இழுத்து வலம் வந்து, பிறகு மீனாட்சியம்மன் கோயில் வந்து சேர்கிறார். நேற்று முன்தினம் வாஸ்து சாந்தியுடன் துவங்கி, நேற்று கொடியேற்றம் விமர்சையாக நடந்த நிலையில், பிப். 2ல் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, பிப். 4ல் மச்சகந்தியார் திருமணம், பிப். 6ல் தீர்த்தம், தெப்பம் முட்டுத்தள்ளுதல், பிப். 7ல் கதிர் அறுப்புத் திருவிழா என அடுத்தடுத்து முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு, பிப். 8ம் தேதி தெப்பத்திருவிழா நடந்தேறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்துள்ளனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy