Press "Enter" to skip to content

குடியாத்தம் அருகே நடந்த கள ஆய்வில் பெருங்கற்கால கல்திட்டை, நினைவுச் சின்னங்கள் கண்டுபிடிப்பு: 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் தனியார் கல்லூரி பேராசிரியர் ஆ.பிரபு, தொல்லியல் ஆய்வாளரும் வரலாற்றுத்துறைப் பேராசிரியருமான சேகர் ஆகியோர் வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள சேங்குன்றத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஏறத்தாழ 6000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த நினைவுச் சின்னங்களைக் கண்டறிந்தனர். இதுகுறித்து முனைவர் ஆ.பிரபு கூறியதாவது: ‘தமிழகத்தின் தொன்மையினை விளக்கும் சான்றுகளாகத் திகழ்பவை தொல்லியல் சின்னங்களாகும். அவை தமிழகத்தின் வடமாவட்டங்களில் அதிக அளவில் கிடைக்கின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் உள்ள சேங்குன்றத்தில் தொடர்ந்து 2 நாட்கள் கள ஆய்வினை மேற்கொண்டோம். அவ்வூரின் மேற்கே உள்ள மலையடிவாரத்தில் தனியாரது விவசாய நிலத்தில் 15க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் உள்ளன.  அவற்றில் ஒரு கல்வட்டத்தினைச் சில சமூக விரோதிகள் புதையல் கிடைக்கும் என்ற நோக்கில் தோண்டிப் பார்த்துள்ளனர். அவ்வாறு அவர்கள் தோண்டிய இடத்தின் உள்ளே ‘கல்பதுக்கை’ உள்ளது.

இக்கல் பதுக்கையானது 6 அடி ஆழத்தில் நான்கு புறமும் உறுதியான பலகைக் கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிழக்குப் புறமாக உள்ள பலகைக் கல்லில் ‘U’ வடிவ இடுதுளை அமைப்பு காணப்படுகின்றது. கல்பதுக்கையினைத் தோண்டியவர்கள் விட்டுச் சென்ற மண் குவியலில் ஈமப்பேழையின் உடைந்த கால்கள் இரண்டு கிடைத்துள்ளன. இவை மண்ணால் செய்து சுட்டெடுக்கப்பட்டவையாகும். இந்த கால்களானது அழகிய வேலைப்பாடுடன் வடிவமைப்பட்டுள்ளன. மேலும் சில கருப்பு சிவப்பு வண்ண மட்கலத்தின் ஓடுகள் உடைந்த நிலையில் கிடைத்துள்ளன. இவை ஈமப்பேழையில் வைக்கப்பட்ட ஈமப்பொருட்களாகும். அவ்விடத்தில் மேலும் 10க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் நல்ல நிலையில் காணப்படுகின்றன. எகிப்து நாட்டில் உள்ள மம்மிக்கள் போல தமிழகத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்ய அக்காலத்தில் இந்தக் கல் பதுக்கைகள் அமைக்கப்பட்டன. இந்தக் கல்வட்டங்கள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவையாகும். இதன் காலம் கி.மு. 3ம் நூற்றாண்டாகும்.பெருங்கற்காலம் என்பது மக்கள் பெருங்கல் ஈமச் சின்னங்களைப் பயன்படுத்திய காலத்தைக் குறிக்கும்.

இறந்தோரைப் புதைத்த இடத்தில் அல்லது அவர்களது எலும்புகளைப் புதைத்த இடத்தில் சுற்றிலும் பெரிய கற்களைக் கொண்டு சூழப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட ஈமச்சின்னங்களைப் பெருங்கல் சின்னங்கள் என்று குறிப்பிடுகிறோம். இக்கால ஈமக்குழிகள் பலவித வடிவங்களில் பல்வேறு பெயர்களுடன் காணப்படுகின்றன. அவற்றில் கல்திட்டை, கல்பதுக்கை, கல்வட்டம் ஆகிய மூன்று வடிவங்களும் இவ்வூரில் கிடைத்திருப்பது சிறப்புக்குரியதாகும். கல்திட்டைகளானது இவ்வூரில் உள்ள மலைப்பாதையில் 6 கி.மீ நடைபயணத் தொலைவில் மலைமுகட்டில் உள்ளன. எட்டு ஏக்கர் பரப்பளவில் 15 கல்திட்டைகள் காணப்படுகின்றன. அவற்றில் 8 கல்திட்டைகள் நல்ல நிலையில் உள்ளன. அவை ஒவ்வொன்றும் மூன்று அடுக்கு கொண்ட சிறிய கற்களை நான்கு புறமும் அடுக்கி, அதன் மேல் 8 அடி சதுரப்பரப்பும், 2 அடி விட்டமும் கொண்ட பலகைக் கல்லால் மூடப்பட்டுள்ளன. இந்தப் பலகைக் கற்கள் சுமார் ஐந்து டன் எடை இருக்கக்கூடும். இவற்றை மனித ஆற்றலினால் எவ்வாறு தூக்கி நிலைநிறுத்தினர் என்பதை எண்ணும் போது வியப்பாக உள்ளது.

இக்கற்களை இவ்வூர் மக்கள் ‘பாண்டவர் கல்’ என்றழைக்கின்றனர். இப்பெயரானது ‘மாண்டவர் கல்’ என்பதில் இருந்து வந்ததாகக் கருதலாம். இந்தக் கல்திட்டைகளுக்கு அருகாமையில் சிறியதும் பெரியதுமாக ஐந்து நீர்ச்சுனைகள் உள்ளன. அவற்றில் தண்ணீர் நிரம்பியுள்ளன. நீர் சுவையுள்ளதாகவும்  பருகுவதற்கு ஏற்ற நிலையிலும் இருக்கிறது. நீர்ச்சுனைக்கு அருகே பாறையில் கல்வட்டம் ஒன்றும் காணப்படுகின்றது. இவ்வகையான நினைவுச் சின்னங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனபின்னும் இன்றும் உறுதியோடு காணப்படுகின்றன. ஆனால் அவற்றின் அருமை தெரியாத சிலர் அவற்றைச் சிதைப்பதும், புதையல் கிடைக்கும் என்ற எண்ணத்தால் தோண்டியும் வருவது வரலாற்று ஆர்வலர்கள் மத்தியில் கவலையினை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆகவே அரசும், தொல்லியல் துறையும் இவை போன்ற பாதுகாக்கப்பட வேண்டிய தொல்லியல் நினைவுச்சின்னங்களை முறையாகப் பாதுகாத்திடவும், இந்த ஊரில் ஆய்வு மேற்கொண்டு அகழாய்வு செய்திடவும் வேண்டும்’ இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து கள ஆய்வில் கலந்துகொண்ட தொல்லியல் ஆய்வாளர் முனைவர் சேகர் கூறியதாவது: ‘தமிழக அளவில் அறியப்பட்டுள்ள தொல்லியல் நினைவுச்சின்னங்களில் சேங்குன்றத்தில் தற்போது கண்டறியப்பட்டுள்ளவை முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும். இங்கு ஒரே பகுதியில் கல்வட்டங்கள், கல் பதுக்கை, கல்திட்டைகள் கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல ஜவ்வாது மலை மற்றும் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் காணப்படும் கல் திட்டைகளை குள்ளர் வீடு, வாலியர் வீடு என்றெல்லாம் அழைக்கின்றனர். இவை ஈமச்சின்னங்கள் என்கிற கூற்றை மறு ஆய்வு செய்திட வேண்டும். ஏனென்றால் இந்த கல்திட்டைகள் ஒவ்வொன்றும் 4 முதல் 5 பேர் படுக்கக்கூடிய அளவில் பெரும்பாலும் இருக்கின்றன. எனவே இவை மனித வாழிடமாக இருக்கக்கூடும். இதனை மறு ஆய்வு செய்திட வேண்டும். இவ்வூரின் நிலப்பரப்பில் உள்ள கல்வட்டங்கள் கி.மு. 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். மலை முகட்டில் உள்ள கல்திட்டைகள் கி.மு 5ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும்’ இவ்வாறு அவர் கூறினார்.

Source: Dinakaran

More from தமிழகம்More posts in தமிழகம் »