அலட்சிய அதிகாரிகளால் புரோட்டா கடையாக மாறிய அரசு மீன் விற்பனை நிலையம்

அலட்சிய அதிகாரிகளால் புரோட்டா கடையாக மாறிய அரசு மீன் விற்பனை நிலையம்

பரமக்குடி: பரமக்குடி சாந்தி தியேட்டர் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நகராட்சி சார்பாக மீன் விற்பனை சந்தை செயல்பட்டு வருகிறது. தற்போது, பரமக்குடி நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதால், மீன் விற்பனை அதிகரித்து வருகிறது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சிலர், சாலை மற்றும் தெரு ஓரங்களில் சுகாதாரமற்ற நிலையில் மீன் விற்பனை செய்து வருகின்றனர். காலம் கடந்து மீன்களை ஐஸ் மூலம் பதப்படுத்தி அதிகமான விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால், பொதுமக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சுகாதாரமான சுத்தமான மீன் விற்பனை செய்வதாக தமிழக அரசின்  மீன்வளத் துறை சார்பாக, நவீன மீன் விற்பனை நிலையம் ஒட்டப்பாலம் பகுதியில் மீன்வளத்துறை இணை இயக்குனர் சமீரன் தொடங்கி வைத்தார்.

வெளிச் சந்தையைவிட இங்கு அதிகமான விலைக்கு மீன்கள் விற்கப்பட்டதால் . பொதுமக்கள் ஆதரவின்றி இரண்டு மாதத்திலேயே மூடப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக மீன் விற்பனை நிலையம் புரோட்டா கடையாக மாறியுள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் சுகாதாரமாக மீன்களை விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட இத்திட்டம் முற்றிலும் மாற்றப்பட்டு  புரோட்டா கடையாக மாறியுள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து ஒட்டப்பாலம் ரமேஷ் கூறுகையில், ‘‘அரசின் மூலம் மீன் விற்பனை செய்வதற்காக நகராட்சி மற்றும் வருவாய் துறை சார்பாக இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு சுகாதாரமான குறைந்த விலையில் மீன் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் தற்போது முற்றிலும் எதிராக உள்ளது. மீன் விற்பனை நிலையம் தற்போது புரோட்டா கடையாக மாறியுள்ளது. இதனால் மீண்டும் சாலையோர கடைகளில் தான் மீன் வாங்குகிறோம். அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் மீண்டும் மீன் விற்பனை நிலையம் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy