அனந்தபுரி எக்ஸ்பிரஸ் சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாறுமா?.. தொடர் வண்டிகால அட்டவணை தயாரிக்கும் பணி தீவிரம்: பல ரயில்களை நீட்டித்து தர கோரிக்கை

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாறுமா?.. தொடர் வண்டிகால அட்டவணை தயாரிக்கும் பணி தீவிரம்: பல ரயில்களை நீட்டித்து தர கோரிக்கை

நாகர்கோவில்: புதிய ரயில் கால அட்டவணையில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலை , சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றி அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ரயில்வே துறை ஒவ்வொரு ஆண்டும் புதிய ரயில் கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ரயில் காலஅட்டவணையை தயாரிக்கும் பணியில் ரயில்வே அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் சேர்க்கப்படும் திட்டங்கள் நிச்சயம் நிறைவேற்றப்படும். ரயில் சேவைகளை பொறுத்தவரை தமிழகம் இன்னும் பின்னடைவான நிலையில் தான் உள்ளது.

குறிப்பாக குமரி மாவட்டத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு செல்ல போதிய ரயில் வசதி  இல்லை. எனவே இந்த குறையை தீர்க்கும் வகையில் ரயில் கால அட்டவணையில் திருத்தம் வருமா?  என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரியிலிருந்து. மங்களூருக்கு தினசரி இரவு நேர ரயில் வசதி இல்லை. இந்த தடத்தில் தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்பது 26 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்கு திருவனந்தபுரம் – மங்களூர் இரவு நேர ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று  குமரி மாவட்ட பயணிகளின் கோரிக்கை ஆகும்.

வேளாங்கண்ணிக்கு தினசரி ரயில்:

கிறிஸ்தவர்களின் புனித இடமான வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு திருவனந்தபுரம் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இருந்து அதிகபடியான கிறிஸ்தவ மற்றும் பிற மதத்தினரும்  வேளாங்கண்ணி மாதாவை தரிசிக்க செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக கொச்சுவேலியிலிருந்து நாகர்கோவில் , திருநெல்வேலி, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு தினசரி ரயில் வேண்டும் என்பது கோரிக்கை ஆகும்.

திருக்குறள் ரயில் தினசரி ரயிலாக மாறுமா?

தமிழகத்திலிருந்து இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு போதிய ரயில்வசதி இல்லை. கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை, விஜயவாடா, நாக்பூர், போபால் வழியாக டெல்லிக்கு, வாரத்துக்கு 2 நாள் செல்லும் நிஜாமுதீன் எக்ஸ்பிரசை  தினசரி ரயிலாக இயக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், பண்ரூட்டி போன்ற பகுதிகளை ரயில் மார்க்கமாக நேரடியாக இணைக்கும், வாராந்திர ரயிலான கன்னியாகுமரி  புதுச்சேரி ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.

நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னை தாம்பரத்துக்கு தற்போது இயங்கிவரும் வாரம் மூன்று முறை ரயிலை தினசரி செல்லதக்க வகையில் இயக்க வேண்டும். சென்னை சென்ட்ரல் வரை செல்லும் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாகவும் மாற்றம் செய்து இயக்க வேண்டும்.

ஐதராபாத்துக்கு நேரடி ரயில்

தென்மாவட்ட பகுதிகளிலிருந்து  ஐதராபாத்துக்கு செல்ல நேரடி தினசரி ரயில் வசதி இல்லை. நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை மற்றும் திருச்சி போன்ற நகரங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஐதராபாத்துக்கு வேலை வாய்ப்பு மற்றும் பல்வேறு பணிகள் நிமித்தம் தினசரி சென்று வருகின்றனர். தற்போது தமிழ்நாட்டின் தென்பகுதியிலிருந்து ஐதராபாத்துக்கு செல்ல வேண்டுமானால்  காலையில் சென்னை சென்று, மாலையில் சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு செல்லும் ரயிலில் செல்ல வேண்டும். இதனால் தென் மாவட்ட பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

எனவே சென்னையிலிருந்து ஐதாராபாத்துக்கு இயக்கப்படும் மூன்று தினசரி ரயில்களில் ஒரு ரயிலை மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். அப்படி இயக்கினால் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 12 மாவட்ட பயணிகள் நேரடியாக பயன்படும்படியாக இருக்கும் என்பன போன்ற கோரிக்கைகள் இன்னும் கிடப்பில் தான் உள்ளன. இதை நிறைவேற்றும் வகையில், ரயில் கால அட்டவணையில் திருத்தம் வேண்டும் என்பது குமரி மாவட்ட ரயில் பயணிகளின் கோரிக்கை ஆகும்.  மும்பை – நாகர்கோவில் ரயிலின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும்.

அனந்தபுரி எக்ஸ்பிரஸ்  சூப்பர் பாஸ்ட் ஆகுமா?

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்ற வேண்டும் என்பதும் நீண்ட கால கோரிக்கை ஆகும்.  கன்னியாகுமரி – சென்னை  எக்ஸ்பிரசுக்கு அடுத்தபடியாக அனந்தபுரி எக்ஸ்பிரசை தான், குமரி மாவட்ட மக்கள் பயன்படுத்துகிறார்கள். அனந்தபுரி  எக்ஸ்பிரஸ் மாவட்டத்தின் மேற்கு பகுதிகளான கல்குளம் மற்றும் விளவங்கோடு தாலுகாவை சார்ந்த பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இருக்கைகள் கிடைப்பது இல்லை. இதனால் மாவட்டத்தில் உள்ள பெருவாரியான பயணிகள் அடுத்த தேர்வாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலையே நம்பி உள்ளனர்.

இந்த ரயில் மட்டுமே குமரி மாவட்டத்தில் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களையும் தலைநகர் சென்னையுடன் இணைக்கிறது.  இந்த ரயிலை சூப்பர்பாஸ்ட் ரயிலாக மாற்றம் செய்து குமரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலைய நிறுத்தங்களை ரத்து செய்யாமல் சென்னைக்கு தென் மாவட்டத்திலிருந்து செல்லும் முதல் ரயிலாக இயக்க வேண்டும் என்பது கோரிக்கை ஆகும். இந்த கோரிக்கையும் இந்த பட்டியலில் இணையுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

எம்.பி. ,எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்த வேண்டும்

இது குறித்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறுகையில், இந்த ரயில்கால அட்டவணை தயாரிப்பு மாநாடு பிப்ரவரியில் பெங்களூரில் நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டில் இந்தியாவில் உள்ள 73 ரயில்வே கோட்டங்களில் உள்ள கால அட்டவணை கட்டுபாட்டாளர் மற்றும் 17 ரயில்வே மண்டலங்களில் உள்ள முதன்மை காலஅட்டவணை கட்டுபாட்டாளர்கள் கலந்து கொள்வார்கள். இவர்கள்  ரயில்வே காலஅட்டவணையில் புதிய ரயிலுக்கான அறிவிப்புகள், தற்போது இயங்கி கொண்டிருக்கும் ரயில்களின் நீட்டிப்பு, ரயில்களின் சேவைகள் அதிகரித்தல், காலஅட்டவணை மாற்றம் செய்தல், புதிய ரயில்கள் நிறுத்தம், வழிதடங்களை மாற்றி இயக்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டு பட்டியல் தயாரிக்கப்படும். குமரி மாவட்டத்தை பொறுத்தவரை முனைய வசதி இல்லாத காரணத்தால் பல ரயில்வே திட்டங்கள் கிடப்பில் உள்ளன. எனவே எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இது தொடர்பாக அதிகாரிகளை வலியுறுத்தி புதிய திட்டங்களை இந்த பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy