நல்லம்பள்ளி பகுதியில் தண்ணீரின்றி வறண்ட ஏரிகள்: விவசாயிகள் கவலை

நல்லம்பள்ளி பகுதியில் தண்ணீரின்றி வறண்ட ஏரிகள்: விவசாயிகள் கவலை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாரத்தில் உள்ள ஏரிகள் வறண்டு கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகாவில் நல்லம்பள்ளி, சேஷம்பட்டி, கோவிலூர், நார்த்தம்பட்டி, இலளிகம், கோம்பேரி, பாளையம்புதூர், ஜருகு, இண்டூர், திப்பட்டி, அதகபாடி என 50க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் 622 மி.மீ மழை சராசரி மழையாகும். கடந்த சில ஆண்டுகளாக மழையளவு குறைந்து கொண்டே சென்றது. இதனால் ஏரிகள், குளங்களில் நீர்வரத்தும் குறைந்து அனைத்து நீர்நிலைகளும் முள்புதர்களாக மாறியது.

நடப்பாண்டில் பருவமழைக்கு முன்னதாக, நல்லம்பள்ளி ஏரி உள்பட பல ஏரிகள் தூர்வாரப்பட்டன. இதையொட்டி நல்லம்பள்ளி வட்டாரத்தில் கோவிலூர், நார்த்தம்பட்டி, கோம்பேரி, அதியமான்கோட்டை ஏரி, ஏ.ஜெட்டிஅள்ளி ஏரி என ஒரு சில ஏரிகள் மட்டுமே ஓரளவிற்கு நீர் நிரம்பியது. நல்லம்பள்ளி பகுதியில் பாலஜங்கமனஅள்ளி ஊராட்சி மேட்டுப்பகுதியாகும். இந்த பகுதியில் மழையை நம்பி மட்டுமே இப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். பாஜங்கமனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஏரிகளான பாலஜங்கமனஅள்ளி ஏரி, கூன்மாரிக்கொட்டாய் ஏரி உள்பட நல்லம்பள்ளி வட்டாரத்தில் 20க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு, நீர்வரத்து இன்றி வறண்டே காணப்படுகிறது. நல்லம்பள்ளி வட்டாரத்தில் தொப்பையாறு, நாகாவதி அணை என இரு அணைகள் இருந்தும் பாலஜங்கமனஅள்ளி, நாகர்கூடல் பகுதி பாசன நிலங்களுக்கு நீர் வரத்து இன்றி வறண்டே காணப்படுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த போதும், நல்லம்பள்ளி பகுதியில் நடப்பாண்டில் போதிய மழை பெய்யவில்லை. நல்லம்பள்ளி அருகே குடிப்பட்டி அடுத்த கூன்மாரிக்கொட்டாய் ஏரிக்கு மழை நீர் வந்து பலவருடங்களாகவிட்டன. நடப்பாண்டிலும் பல ஏரிகள் வறண்டே காணப்படுகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் பருவமழை மற்றும் குளிர்காலங்களை நம்பி மானாவாரியாக சோளம், கேழ்வரகு, உளுந்து, துவரை, பனிக்கடலை போன்றவைகளே அதிகம் பயிரிட்டு வருகின்றனர். இந்த பகுதியில் பல கிணறுகளில் நீர் இன்றி பாறைகளாகவே காணப்படுகிறது. பலர் விவசாயம் செய்வதையே விட்டுவிட்டனர். கால்நடைகளுக்காக ஒரு சில விவசாயிகள் சோளம் போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர்’ என்றார்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy