அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியின் பிணை மனு தள்ளுபடி

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியின் பிணை மனு தள்ளுபடி

சூலூர்: அ.தி.மு.க. இணையதளத்தை தவறாக பன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அ.தி.மு.க. கட்சியில் எம்.பி.யாக இருந்தவர் கே.சி.பழனிச்சாமி. இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டபின் அ.தி.மு.க.வின் இணையதளத்தை போலியாக உருவாக்கி கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கியதாகக் கூறி  கந்தவேல் என்பவர் அளித்த புகாரின்பேரில், சூலூர் போலீசார் கடந்த 25ம் தேதி கே.சி.பழனிச்சாமியை கைது செய்தனர்.இந்நிலையில் தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி கே.சி.பழனிச்சாமி சார்பில் ஜாமீன் மனு சூலூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. கே.சி.பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, கே.சி.பழனிசாமி இன்னும் அ.தி.மு.க.வில்தான் உள்ளார். அவரை கட்சியில் இருந்து நீக்க கட்சியின் பொதுச் செயலாளருக்குத்தான் அதிகாரம் உள்ளது. தற்போது பொதுச்செயலாளர் பதவி இல்லாததால் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த நியமனம் தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அவரை நீக்கியது செல்லாது. எனவே ேக.சி. பழனிச்சாமியை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என வாதாடினார். அரசு வழக்கறிஞர் வாதாடும்போது, குற்றம் சாட்டப்பட்டுள்ளவரை ஜாமீனில் விடுதலை செய்தால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என ஆட்சேபனை தெரிவித்தார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதாடினார். அரசு வழக்கறிஞர் தங்கராஜூடன் அ.தி.மு.க. வழக்கறிஞர்களும் கே.சி. பழனிச்சாமிக்கு ஜாமீன் அளிக்க எதிர்ப்பு தெரிவித்து வாதாடினர். சூலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேடியப்பன், இரு தரப்பு வாதங்களையும் கேட்டபிறகு கே.சி.பழனிச்சாமியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy