72-வது நினைவு நாள்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

72-வது நினைவு நாள்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்புத்துறை மந்திரி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

புதுடெல்லி:

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 72-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு உயிர்த்தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவர்களது தியாகத்தை நினைவுகூர்ந்து போற்றும் வகையிலும், காந்தி நினைவு நாள் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது. 

மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அத்வானி

மகாத்மா காந்தி நினைவிடத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல் பாஜக மூத்த தலைவரான எல்.கே.அத்வானியும், காந்தி நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினார்.

காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவனே, கடற்படை தளபதி கரம்பீர் சிங், விமானப்படை தளபதி பதூரியா, மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல் நாடு முழுவதிலும் மகாத்மா காந்தி சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. அவரது உருவப்படங்களும் ஆங்காங்கே அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது. 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan