சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மஞ்சள் திருமாங்கல்யம் வைத்து பூஜை: தடைபட்ட திருமணம் விரைவில் நடக்கும்

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மஞ்சள் திருமாங்கல்யம் வைத்து பூஜை: தடைபட்ட திருமணம் விரைவில் நடக்கும்

காங்கயம்: காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் சுப்ரமணியசாமி கோயிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கோவையை சேர்ந்த பக்தர் ஒருவரது கனவில் வந்த உத்தரவான மஞ்சளுடன் திருமாங்கல்யம் வைத்து நேற்று முதல் பூஜை செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணிய சாமி கோயிலில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். நாட்டில் ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்தும் வகையில் இது அமைந்துள்ளது. சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி அது சம்மந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.

பக்தர் கனவில், சிவன்மலை ஆண்டவர் வந்து, குறிப்பிட்ட பொருளை கொண்டு வந்து தருமாறு கேட்டுக்கொள்வார். பக்தர் கூறும் தகவலை, அர்ச்சகர்கள் சுவாமி சன்னதியில், வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்பர். வெள்ளை பூ விழுந்தால் மட்டுமே, அந்த பொருள் உத்தரவு கண்ணாடி பேழையில் வைத்து, பூஜை செய்யப்படும். இதுவரை இங்கு மண், துப்பாக்கி, மஞ்சள், இளநீர், தங்கம் சர்க்கரை, கணக்கு நோட்டு, பூமாலை என பல்வேறு பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. கடந்த 2004ம் ஆண்டு உத்தரவு பெட்டியில் தண்ணீர் வைத்து பூஜையானபோது சுனாமி நிகழ்ந்தது.

2012ம் ஆண்டு ஆற்று நீர் வைத்து பூஜை செய்தபோது முல்லை பெரியார் அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி முதல், ஐம்பொன் மகாலட்சுமி சிலை பூஜைக்கு வைக்கப்பட்டது. இந்நிலையில் கோவை பெரியநாயக்கன்பாளையம், காமராஜ் நகரைச் சேர்ந்த காமராஜ் (46) என்பவரின் கனவில் மஞ்சள் திருமாங்கல்யம் உத்தரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் மஞ்சள் திருமாங்கல்யம் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

இது பற்றி கோயில் சிவாச்சாரியார் கூறியதாவது: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதோ, அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். நேற்று முதல் மஞ்சள் திருமாங்கல்யம் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தடைபட்ட திருமணம் விரைவில் நடக்கும். சுபகாரியம் அதிகரிக்கும். சமுதாயத்தில் இதன் தாக்கம் போகபோகத்தான் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார். ேமலும் கடந்த சில வருடங்களாக விலை சரிந்து காணப்படும் மஞ்சளின் விலை உயரலாம் எனவும், திருமாங்கல்யம் சுப நிகழ்வை குறிப்பதால் இனி வரும் நாட்களில் திருமணத்தடை உள்ளவர்களுக்கு தடை நீங்கி திருமணம் நடைபெறலாம் எனவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy