பாம்பன் மீனவர் வலையில் சிக்கியது மெகா சைஸ் சுறா

பாம்பன் மீனவர் வலையில் சிக்கியது மெகா சைஸ் சுறா

ராமேஸ்வரம்: மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடித்து திரும்பிய மீனவர் வலையில் 100 கிலோ எடை கொண்ட மெகா சைஸ் சுறா மீன் சிக்கியது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதி விசைப்படகு மீனவர்கள் சமீபகாலமாக மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்க சென்று அதிகளவு மீன்களுடன் கரை திரும்புகின்றனர். 2 நாட்களுக்கு முன்பு கடலுக்கு சென்று திரும்பிய பாம்பன் மீனவர்களுக்கு அதிகளவில் சீலா, கட்டா மீன்கள் கிடைத்தது. இதனால் மீனவர்களிடையே மகிழ்ச்சி நிலவியது. நேற்று முன்தினம் பாம்பன் தெற்குவாடி கடலில் இருந்து மீனவர்கள் மன்னார் வளைகுடா கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இரவு முழுவதும் மீன் பிடித்து திரும்பிய மீனவர் ஒருவரின் வலையில் சுமார் 100 கிலோ எடையுள்ள மெகா சைஸ் சுறா மீன் சிக்கியது. 6 அடி நீளம், 3 அடி சுற்றளவுடன் இருந்தது. இதுபோல் பலவகை மீன்களும் மீனவர்களுக்கு கிடைத்தது. அதிகளவில் மீன்வரத்து இருந்த நிலையில், பிடிபட்ட மீன்களுடன் நேற்று காலை மீனவர்கள் பாம்பன் கடற்கரைக்கு வந்தனர். படகில் இருந்து கரைக்கு கொண்டு வரப்பட்ட மீன்களை அதிக விலை கொடுத்து வியாபாரிகள் ஏலத்தில் எடுத்து சென்றனர். இதில் 100 கிலோ எடை கொண்ட சுறா மீன் ரூ.18,500க்கு விலை போனது. பாம்பன் மீனவர்கள் மீன் பிடித்து திரும்பிய நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று காலை பாக் ஜலசந்தி கடலில் வழக்கம்போல் மீன்பிடிக்க சென்றனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy