ராமேஸ்வரம் அருகே கடலில் கரை ஒதுங்கிய மூன்று கஞ்சா பொட்டலம்

ராமேஸ்வரம் அருகே கடலில் கரை ஒதுங்கிய மூன்று கஞ்சா பொட்டலம்

ராமேஸ்வரம்,: தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய கஞ்சா பார்சல்களை மரைன் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள கோதண்டராமர் ேகாயில் பகுதியில் கடலில் கஞ்சா பார்சல்கள் மிதந்து வருவதாக மரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கோயில் கடற்கரை பகுதிக்கு சென்ற மரைன் போலீசார் கடலோரத்தில் ஒதுங்கி கிடந்த மொத்தம் 6 கிலோ எடையுள்ள 3 கஞ்சா பார்சல்களை கைப்பற்றினர். அப்பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தனர். கடத்தி செல்ல முயன்றபோது, படகிலிருந்து கஞ்சா பார்சல்கள் கடலில் தவறி விழுந்திருக்கலாம். கடல் அலையில் கரைக்கு ஒதுங்கி விட்டது என்றும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் மற்றும் மண்டபம் கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் திருட்டுத்தனமாக கஞ்சா கடத்தி செல்வது வழக்கமாக உள்ளது. அதிகளவில் கஞ்சா கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்தாலும் பாதுகாப்பு ஏஜென்சிகளால் கைப்பற்றப்படுவது மிகவும் குறைவு.
எப்போதாவது ராமேஸ்வரத்திற்கு கடத்தி வரப்படும் கஞ்சா பார்சல்கள் வழியில் போலீசார் மற்றும் கியூ பிரிவு புலனாய்வு துறையினரால் கைப்பற்றப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து கடத்தி செல்லப்படும் கஞ்சா பார்சல்கள் டன் கணக்கில் இலங்கையில் போலீசார் மற்றும் ராணுவத்தினரால் கைப்பற்றப்படுகிறது. இதனால் ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடலோர பகுதியில் மரைன் போலீசார் மற்றும் புலனாய்வு துறையினர் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில் பகுதியில் நேற்று மரைன் போலீசார் கஞ்சா பார்சல்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy