சாலையோரம் சுகாதாரமற்ற நிலையில் இயங்கும் இறைச்சி கூடங்களுக்கு தனி கட்டிடம் அமைக்க வேண்டும்: மாநகராட்சி, நகராட்சிகளுக்கு கால்நடைத்துறை அறிவுறுத்தல்

சாலையோரம் சுகாதாரமற்ற நிலையில் இயங்கும் இறைச்சி கூடங்களுக்கு தனி கட்டிடம் அமைக்க வேண்டும்: மாநகராட்சி, நகராட்சிகளுக்கு கால்நடைத்துறை அறிவுறுத்தல்

வேலூர்: சுகாதாரமற்ற நிலையில் இயங்கும் இறைச்சி கூடங்களுக்கு தனி கட்டிடம் அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி, நகராட்சிகளுக்கு கால்நடைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். இன்றைய சூழலில் அசைவ உணவு மனிதனின் உணவு பட்டியலில் முக்கிய இடம் பெற்றுள்ள நிலையில் ஒவ்வொரு ஊரிலும் ஆடு, மாடு அறுக்கும் கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில் மாடுகள் அறுக்கும் கூடங்கள் பெரும்பாலும் வெட்டவெளியில் எல்லா இடங்களிலும் அமைந்துள்ளன. இவ்வாறு இயங்கும் இறைச்சி கூடங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் முறையாக அகற்றப்படாமல், கடைகளுக்கு அருகிலும், கழிவுநீர் கால்வாய்களிலும், ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் சென்று கலக்கும் வகையிலும் விடப்படுகிறது. இவ்வாறு வெளியேற்றும் இறைச்சிக் கழிவுகளை இழுத்துச் செல்லும் தெருநாய்கள் குடியிருப்பு பகுதிகளில் விட்டுச் செல்கின்றன.

இதனால் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கடும் துர்நாற்றம் வீசி தொற்று நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் அவல நிலை உள்ளது. இவ்வாறு பொது இடங்களில் அசுத்தமான முறையில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் அருவருக்கத்தக்க நிலையில் இருப்பதாகவும், அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக கால்நடைத்துறை அதிகாரிகள் தீவிர களப்பணிகளை மேற்கொண்டனர். தமிழகத்தின் முக்கிய பெருநகரங்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் நடந்த ஆய்வின் முடிவில் இறைச்சி கூடங்கள் சுகாதாரமற்ற நிலையில் இயங்குவது கண்டறியப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பொது இடங்களில் சுகாதாரமற்ற நிலையில் இயங்கும் இறைச்சி கூடங்களை கண்டறிந்து ஒழுங்குபடுத்த கால்நடைத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மாநகராட்சி, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகரின் மையப்பகுதிகளில் இயங்கி வரும் இறைச்சி கூடங்கள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இவற்றை ஒழுங்குபடுத்தும் விதமாக நகரின் வெளிப்புறத்தில் மாநகராட்சி, நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் கட்டிடம் அமைக்க மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் வசதி, இறைச்சிக்கழிவுகளை முறையாக அகற்றுவதற்கான தொட்டிகள், இறைச்சியில் தொற்றுநோய் தாக்கம் ஏற்படாத வகையில் சுகாதாரமான முறையில் பாதுகாத்து வைப்பதற்கான வசதிகளுடன் கட்டமைக்க வேண்டும். இதுதொடர்பாக மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இறைச்சி கூடங்களை சுகாதாரமான முறையில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy