வேலூர் கோட்டைக்குள் கருங்கற்கள் பதிக்கும் பணிகள் தீவிரம்

வேலூர் கோட்டைக்குள் கருங்கற்கள் பதிக்கும் பணிகள் தீவிரம்

வேலூர்: வேலூர் கோட்டைக்குள் 4 கிலோ மீட்டர் கருங்கற்கள் கொண்டு நடைபாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலூர் கோட்டையை அழகுபடுத்த 33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியில் அகழி தூர்வாருதல், வண்ண விளக்குகள் அமைத்தல், கோட்டை பின்புறம் லேசர் அரங்கம் அமைத்தல், திறந்தவெளி திரையரங்கம், உணவகம், பொழுதுபோக்கு அம்சங்கள், நடைபாதை உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதில் அகழி தூர்வாரும் பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளது. கோட்டையின் அழகை கண்டுகளிக்கும் விதமாக படகு சவாரியும் விடப்பட உள்ளது.

இதற்கிடையில், கோட்டைக்குள் தினமும் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். அவர்கள் எளிதில் நடைபயிற்சி மேற்கொள்ளும் விதமாகவும், கோட்டையின் அழகை மெருகேற்றும் வகையிலும் பழமை மாறாத வகையில் நடைபாதை அமைக்கப்பட உள்ளது.இதற்காக பல்வேறு இடங்களில் இருந்து பளபளக்கும் கருங்கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. கோட்டை நுழைவு வாயிலில் இருந்து உள்ளே இருக்கும் மைதானத்தை சுற்றியும், ஜலகண்டேஸ்டவரர் கோயில் மைதானத்தை சுற்றியும் இந்த கருங்கல் நடைபாதை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த நடைபாதை 4.2 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy