கொளுத்தும் வெயிலால் குற்றாலம் அருவிகளில் குறையும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கொளுத்தும் வெயிலால் குற்றாலம் அருவிகளில் குறையும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தென்காசி: குற்றாலத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீசன் துவங்கினாலும் அருவிகளில் ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரம் வரை தண்ணீர் குறைவாகவே விழுந்தது. ஆனால் அதன் பிறகு பருவமழை நன்றாக பெய்ததால் தொடர்ச்சியாக தண்ணீர் குறைவின்றி விழுந்தது. குறிப்பாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் விரதம் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அருவிகளில் திருப்தியுடன் குளித்து செல்லும் அளவிற்கு தண்ணீர் நன்றாக விழுந்தது.கடந்த ஜூன் மாதம் தொடங்கி தற்போது வரை அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் விழுந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மாதத்தின் துவக்கத்தில் அருவிகளில் ஓரளவு தண்ணீர் நன்றாக விழுந்த நிலையில் தற்போது தென்காசி, குற்றாலம் பகுதிகளில் வெயிலின் அளவு அதிகரித்து இருப்பதாலும், மழை இல்லாததாலும் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுகிறது.

மெயினருவியில் ஆண்கள் பகுதியில் சிறிதளவு தண்ணீர் விழுகிறது. பெண்கள் பகுதியில் தண்ணீர் குறைவாக கசிகிறது. ஐந்தருவியில் இரண்டு பிரிவுகளில் சிறிதளவு தண்ணீர் விழுகிறது. புலியருவியில் தண்ணீர் வரத்து அடியோடு நின்றுவிட்டது. பழைய குற்றாலத்தில் குறைவாக தண்ணீர் விழுகிறது. தண்ணீர் குறைவாக விழுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் அவர்களின் வருகையும் குறைந்து காணப்படுகிறது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy