ஆட்சியர் அலுவலகம் பின்புறம் சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்த வாகனங்கள்: விபத்து ஏற்படும் அபாயம்

ஆட்சியர் அலுவலகம் பின்புறம் சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்த வாகனங்கள்: விபத்து ஏற்படும் அபாயம்

விழுப்புரம்: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் பின்புறம் சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. சென்னை – திருச்சி நான்குவழிச்சாலைகளில் உள்ளூர் மக்கள், வாகன ஓட்டிகள் பயன் பாட்டிற்காகவும், விபத்துக்களை குறைக்கும் வகையில் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் ஒலக்கூர் முதல் மாவட்டத்தின் எல்லைப்பகுதி முடியும்வரை உள்ள இந்த நான்குவழிச்சாலையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் சாலைகள் முற்றிலும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி தவிக்கிறது. சில இடங்களில் உலர்கலமாகவும், கால்நடைகளை கட்டி மாட்டுத்தொழுவமாகவும் மாற்றியுள்ளனர்.குறிப்பாக மாவட்ட தலைநகரான ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள சர்வீஸ் சாலைகள் முழுவதும் லாரிகள் நிறுத்தப்பட்டு பார்க்கிங் இடமாக மாற்றியுள்ளன. வெளியூர்களிலிருந்து லோடு ஏற்றிவரும் லாரிகள் இந்த சர்வீஸ் சாலையை முற்றிலும் ஆக்கிரமித்துள்ளன.

இதனால் சென்னை- திருச்சி மார்க்கத்திலிருந்து நகருக்குள் செல்பவர்கள் இந்த சர்வீஸ் சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் குடியிருப்புவாசிகளும் பாதிப்படைந்துள்ளனர். பெருந்திட்ட வளாகத்தில் ஆட்சியர் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த சர்வீஸ்சாலை வழியாகவே பெருந்திட்டவளாகத்திற்குள் செல்ல முடியும். அரசு அதிகாரிகள் செல்லக்கூடிய இச்சாலையை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்க போக்குவரத்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
வைத்துள்ளனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy