அதிகாரிகள் அலட்சியத்தால் கடையத்தில் கடும் சுகாதார கேடு: மக்கள் அவதி

அதிகாரிகள் அலட்சியத்தால் கடையத்தில் கடும் சுகாதார கேடு: மக்கள் அவதி

கடையம்: கடையத்தில் குப்பை தொட்டிகள் வைக்கப்படாததால் குப்பைகள் சிதறி கழிவு நீருடன் கலந்து கடும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
கடையம் தங்கம்மன் கோயில் தெருவில் சுமார் நூறு குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த தெருக்களில் குப்பைகளை சேகரிக்க வரும் வாகனம் வந்து பல மாதங்கள் ஆகிறது. மேலும் தெருக்களில் குப்பை தொட்டிகளும் அமைக்கபடவில்லை. இதனால் சொசைட்டி அருகிலும், காவல் நிலையத்திற்கு பின்புறமும் குப்பைகள் சேர ஆரம்பித்தன. காவல் நிலையம் பின்புறம் கழிவு நீரோடை தூர்வாராமல் பராமரிக்காததால் ஓடை தூர்ந்து கழிவு நீர் செல்ல முடியாமல், சிதறி கிடக்கும் குப்பைகளுடன் கலந்து துர்நாற்றம் வீசி வருகிறது.

கடந்த வாரம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் கடையம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். ஆட்சியர் வருகையை முன்னிட்டு கடையம் மெயின் ரோடு பகுதிகளில் தேங்கிய குப்பைகள் அகற்றப்பட்டன. அதுபோல தங்கம்மன் கோயில் தெருவிலும் குப்பைகள் அகற்றபடும் என அப்பகுதி மக்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால் அப்போதும் குப்பைகள் அகற்றபடவில்லை.இதுபற்றி அப்பகுதி மக்கள் அதிகாரிகளிம் பல முறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. இதனால் இந்த தெரு பகுதி முழுவதும் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த பகுதியில் கடும் சுகாதார சீர்கேடு நிலவி வருவதால் மக்கள் நிம்மதியின்றி தவிக்கின்றனர். எனவே தென்காசி மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு வாறுகாலை தூர்வாரி குப்பைகளை அகற்றி குப்பை தொட்டிகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy